தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
தினத்தந்தி 11 Nov 2022 7:30 PM GMT (Updated: 11 Nov 2022 7:30 PM GMT)

சேலம் மாவட்டத்தில் நேற்று பெய்த தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.

சேலம்

சேலம் மாவட்டத்தில் நேற்று பெய்த தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.

தொடர் மழை

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் நேற்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் நேற்று அதிகாலை முதல் இடைவிடாமல் சாரல் மழை பெய்ய தொடங்கியது.

இதனால் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக ஆத்தூர், வாழப்பாடி, எடப்பாடி, ஓமலூர், மேட்டூர், ஏற்காடு உள்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது.

மக்கள் நடமாட்டம்

சேலம் மாநகரில் இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை காரணமாக மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார்.

இதனால் மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு செல்லாமல் வீடுகளில் இருந்தனர். அதேசமயம், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் குடைகளை பிடித்தவாறும், மழையில் நனைந்தபடியும் புறப்பட்டு சென்றதை காணமுடிந்தது. மேலும், பல்வேறு தேவைகளுக்காக மளிகை கடை, ஓட்டல்களுக்கு சென்ற பொதுமக்கள் மழையால் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தொடர்ந்து பெய்த மழையால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.

வியாபாரிகள் பாதிப்பு

சேலம் பழைய பஸ்நிலையம் அருகே ஆற்றோர காய்கறி வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதுதவிர, உழவர் சந்தைகளிலும் நேற்று காய்கறிகள் விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் எந்த சேதமும் ஏற்படவில்லை. அதேசமயம், ஏரி, குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டன.

ஏற்காட்டில் நேற்று காலை முதல் மாலை வரையிலும் இடைவிடாமல் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் வழக்கத்தைவிட குளிர் அதிகமாக நிலவியது. இதனால் பொதுமக்கள் வெளியே வராமல் தங்களது வீடுகளிலேயே முடங்கினர். ஏற்காட்டில் வாகன போக்குவரத்து குறைவாக இருந்தது. சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் கடும் மேக மூட்டம் காணப்பட்டது. இதனால் பகலிலேயே வாகனங்கள் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் இயக்கப்பட்டன.

சேலம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-

தலைவாசல்-13, வீரகனூர்-9, தம்மம்பட்டி-7, கெங்கவல்லி-6, பெத்தநாயக்கன்பாளையம்-4.5, சேலம், ஆத்தூர்-4, ஏற்காடு-2.6, கரியகோவில்-1.

இன்று விடுமுறை

இதனிடையே சேலம் மாவட்டத்தில் இன்றும் (சனிக்கிழமை)யும் தொடர் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

-------------------------

(பாக்ஸ்)

மழை பாதிப்பை கண்காணிக்க

கலெக்டர் உத்தரவு

சேலம் மாவட்டத்தில் மழை பாதிப்புகளை கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறை, உள்ளாட்சி துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். மழைக்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தாலுகாவிலும் பெய்யும் மழை குறித்த தகவல்களை, உடனுக்குடன் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மாவட்டத்தில் மழை பெய்யும்போது பாதிக்கப்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள இடங்களில் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடாமலும், மழை பாதிப்புகளால் மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களை பாதுகாப்பாக மீட்டு அருகில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். மேலும், மாவட்டம் முழுவதும் மழையால் ஏற்படும் பாதிப்பு குறித்து பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா எண்ணில் கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்குமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

------------------


Next Story