பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வேலூரில் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
வேலூரில் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
கனமழை
தமிழகத்தில் வடகிழக்குபருவமழை தொடங்கியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்திற்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கனமழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்ததால் வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. வேலூரில் நேற்று பகல் முழுவதும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டது. பார்க்கும் இடமெல்லாம் புகைமண்டலம் இருந்தது. வாகனங்களில் சென்றவர்கள் பகலிலேயே முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர்.
வீடுகளுக்குள்ளே முடங்கினர்
மழையின் காரணமாக கட்டிட தொழில் உள்ளிட்ட பணிகளுக்கு செல்ல முடியாமல் தொழிலாளர்கள் தவித்தனர். பலர் வீட்டை விட்டு வெளியே வராமல் வீடுகளுக்குள்ளே முடங்கினர். இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கலெக்டர் அலுவலகங்களில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கண்காணிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் மழை பாதிப்பு குறித்து இந்த அலுவலகம் மற்றும் அருகில் உள்ள தாலுகா அலுவலகங்களில் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதவிர வேலூர் மாநகராட்சி சார்பிலும் மழை வெள்ள தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
எச்சரிக்கை
அதன்படி தண்ணீர் தேங்க கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு பொதுமக்களை தங்க வைப்பதற்கான பள்ளி, சமுதாய கூடங்களும் தயார் நிலையில் வைத்திருந்தனர்.
மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. நீர்நிலைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மழையின் காரணமாக பொதுமக்கள் ஆறு மற்றும் நீர் நிலைகளில் இறங்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.