கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் - அமைச்சர் அன்பில் மகேஷ்


கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
x

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இதில் பள்ளி முழுமையாக சூறையாடப்பட்ட நிலையில், பள்ளி வாகனங்கள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இந்த போராட்டத்தின் போது, கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது இதில் 55 போலீசார் காயமடைந்தனர். அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நீடித்து வருவதால் வஜ்ரா வாகனங்களுடன் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களை அருகேயுள்ள அரசு பள்ளியில் சேர்க்கலாமா என ஆலோசனை நடத்தி வருகிறோம். ஜனாதிபதில் தேர்தலில் வாக்களித்து விட்டு இன்று கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளேன்.

மாணவி மரண வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் தற்கொலையை தடுக்க கவுன்சிலிங் கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story