அண்ணாமலை எப்படி பேசினாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு ஓட்டு விழாது - ஜெயக்குமார் அதிரடி


அண்ணாமலை எப்படி பேசினாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு ஓட்டு விழாது - ஜெயக்குமார் அதிரடி
x

தி.மு.க.வின் பி டீமாக அண்ணாமலை செயல்படுகிறார் என்று ஜெயக்குமார் கூறினார்.

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பக்குவப்படாத அரசியல்வாதி. அவரது கருத்து தமிழ்நாடு மக்கள் அல்லாமல், உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து. ஜெயலலிதா தன்னுடைய ஆட்சிக் காலத்தில், இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பிற சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த அத்தனை பேருக்கும், மத நல்லிணக்கத்தோடு வாழக்கூடிய அளவிற்கு, ஒரு நல்ல சூழ்நிலையை, தமிழ்நாட்டில் ஏற்படுத்தி காட்டியவர்.

தி.மு.க.வின் பி டீமாக அண்ணாமலை செயல்படுகிறார். ஜெயலலிதாவை ஒரு மதத்துக்குள் அடக்கும் வகையில், ஒரு இழிவான செயலை செய்து வருகிறார். அண்ணாமலை அரசியல்வாதி அல்ல, அரசியல் வியாதி அல்லது அரசியல் வியாபாரி; அவரிடம் எப்படி விவாதம் நடத்துவது. அ.தி.மு.க.வை பற்றி பேசி எங்களிடம் வாங்கி கட்டிக்க வேண்டும் என்பதற்காக அண்ணாமலை இப்படி பேசி வருகிறார்.

ஒரு கவர்னராக இருந்த தமிழிசை தவறான தகவலை கூறலாமா? கரசேவைக்கு ஆட்களை அனுப்பினார் என்று கூறுகிறார். கரசேவைக்கு ஆட்களை அனுப்ப ஜெயலலிதா சொன்னார் என்பதை நிரூபித்தால், அரசியலை விட்டு நான் விலக தயாராக இருக்கிறேன். தெய்வ பக்தி ஜெயலலிதாவுக்கும் இருந்தது. ஆனால் மத பிரிவினை கிடையாது.

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை ஒரு பெரிய கட்சியாக கருதவில்லை. சிறு வயது குழந்தையாக பார்க்கிறோம். அண்ணாமலை எப்படி பேசினாலும் பா.ஜ.க.வுக்கு ஓட்டு விழாது. ரேஷன் கடையில் பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் இல்லை. அடுத்த மாதம் வாங்க கூறுகிறார்கள். அடுத்த மாதம் வரை வயிற்றில் துணியை கட்டி இருப்பார்களா?. தமிழகத்தில் 2026-ல் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைப்பார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story