பால் விநியோகத்தில் பாதிப்பு இல்லை - திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் விளக்கம்


பால் விநியோகத்தில் பாதிப்பு இல்லை - திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் விளக்கம்
x

பொதுமக்களுக்கு பால் விநியோகத்தில் எவ்வித பாதிப்புமில்லை என திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் விளக்கமளித்துள்ளது.

திருச்சி,

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் நாள் ஒன்றுக்கு 4.50 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. அவற்றுள் 1.50 லடம் லிட்டர் பால் பாக்கெட்டுகளாக தயார் செய்து உள்ளூர் விற்பனை செய்தும், 3 லட்சம் லிட்டர் பால் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்திற்கும் அனுப்பப்பட்டு வருகின்றது.

பால் வழங்கும் விவசாயிகளுக்கு பால்பணம் தங்குதடையின்றி பத்து தினங்களுக்கு ஒருமுறை நிலுவையின்றி வழங்கப்பட்டு வருகின்றது. கேன் பால் ஏற்றி வரும் பால் சேகரிப்பு ஒப்பந்த வாகனங்கள், பால்குளிர்வூட்டு நிலையங்களில் பால் சேகரிக்கும் ஒப்பந்த டேங்கர் வாகனங்கள் மற்றும் பால் பாக்கெட்டு விநியோகம் செய்யும் ஒப்பந்த வாகனங்கள் ஆகியவற்றிற்கான வண்டி வாடகை தொகை 15 தினங்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வருகின்றது.

பால்பாக்கெட் விநியோகத்தினை நெறிபடுத்தும் வண்ணம் பகல் நேரங்களில் பெண் அலுவலர்கள் கொண்ட குழுவும், இரவில் ஆண் அலுவலர்கள் கொண்ட குழுவும், பிரத்யேகமாக நியமிக்கப்பட்டு பால் விநியோக வழித்தட வாகனங்களில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டு ஒன்றிய நலன் பேணப்பட்டு வருகிறது.

மேலும் பால் விற்பனை வழித்தட வாகன ஒப்பந்ததாரருக்குரிய வாடகை தொகை 15 தினங்களுக்கு ஒருமுறை ஒரு மாத பட்டியல் தொகையினை நிலுவையில் வைத்து அனுமதிக்கப்பட்டு வருவது நடைமுறையில் உள்ள நிலையில், இன்று 29.05.2024 ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவந்த செய்திகளில் விற்பனை வழித்தட வாகன ஒப்பந்ததாரர்களுக்கு கடந்த 4 மாதங்களாக வாடகை தொகை கொடுக்கப்படவில்லை என்பது பொய்யான பரப்புரையாகும்.

ஒரு மாதம் மட்டுமே விற்பனை வழித்தட வாகன ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய வாடகை தொகை நிலுவையில் உள்ளது. மேலும் வாகன ஒப்பந்ததாரர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் வாகனங்கள் இயக்கப்பட்டுள்ளன. எனவே பால் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

எனவே, உண்மைக்கு மாறான செதிகள் வதந்திகள் திருச்சி ஆவின் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பரப்பப்பட்டு வருவதை திருச்சி ஆவின் நிர்வாகம் மறுக்கின்றது."

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story