நீலகிரி: தொடர் மழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு - 72 பேர் முகாம்களில் தங்க வைப்பு


தொடர் மழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் மூழ்கியதால் கூடலூர்- மசினகுடி இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம், கூடலூர் தேவாலா பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று இரவு கூடலூர் தாலுகா பாடந்தொரை, ஆலவயல் உள்பட பல இடங்களில் ஆற்றுநீர் ஊருக்குள் புகுந்தது. தொடர்ந்து பாடந்தொரை- ஆலவயல் சாலையில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதேபோல் கூடலூர் தொரப்பள்ளி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. தொடர்ந்து கரையோரம் உள்ள இருவயல், குனில் உள்பட பல்வேறு பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் பலரது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதேபோல் கூடலூர் புரமணவயல் கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்தது. இதைதொடர்ந்து 72 பேரை அங்கிருந்து வெளியேற்றி புத்தூர்வயல் அரசு பள்ளிக்கூடத்தில் வருவாய்த்துறையினர் தங்க வைத்தனர்.

இதனிடையே கூடலூர் பகுதியில் அதிக கன மழை பெய்ததால் மாயாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தொடர்ந்து முதுமலை தெப்பக்காடு- மசினகுடி செல்லும் சாலையின் குறுக்கே உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் கூடலூர்- மசினகுடி இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டனர்.

இது குறித்து போலீசார் கூறும் போது, அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்லும் கனரக வாகனங்கள் மட்டும் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். தொடர்ந்து பல இடங்களில் மரக்கிளைகளும் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.


Next Story