கோவை, தஞ்சாவூர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் 21 இடங்களில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை


கோவை, தஞ்சாவூர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் 21 இடங்களில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை
x

பா.ம.க. பிரமுகர் திருவிடைமருதூர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக கோவை, தஞ்சாவூர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் 21 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை,

தமிழ்நாட்டில் நேற்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை பற்றிய விவரம் வருமாறு:-

பா.ம.க. பிரமுகர் கொலை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் மேலதூண்டில் விநாயகம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 45). பா.ம.க. முன்னாள் நகர செயலாளர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந் தேதி திருபுவனத்தில் இருந்து தனது மகனுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்து ஒரு கும்பல் படுகொலை செய்தது.

திருபுவனம் பகுதியில் நடைபெற்று வந்த மதமாற்றங்களை தடுத்ததுடன் மதமாற்றம் செய்ய வந்தவர்களிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாலேயே கொல்லப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த கொலை வழக்கை திருவிடைமருதூர் போலீசார் விசாரித்து வந்தனர்.

கைது

இந்த வழக்கில் குறிச்சி மலையை சேர்ந்த முகமது ரியாஸ், நிஜாம் அலி, சர்புதின், முகமது ரிஸ்வான், அசாருதின் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர் இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. போலீசார் தனியாக வழக்குப் பதிவு செய்து 12 பேரை கைது செய்தனர்.

21 இடங்களில் சோதனை

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மேலும் பல தகவல்கள், ஆதாரங்களை திரட்டும் வகையில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் 9 மாவட்டங்களில் 21 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது.

என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சி நிர்வாகிகள், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை நெல்லை முபாரக் அமைதிப்படுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசியல் காழ்ப்புணர்ச்சி

என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை என்பது பிரதமர் நரேந்திர மோடியின் விசாரணை என்றுதான் சொல்ல வேண்டும். தஞ்சாவூர் மாவட்ட வழக்கை தொடர்பு படுத்தி விசாரணை நடத்தியதாக கூறுகிறார்கள். சிறுபான்மை இயக்கங்களை அடக்கி ஒடுக்குவதற்கு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு விசாரணை நடத்தி உள்ளனர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கும், இந்த வழக்கிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இந்த சோதனையின்போது எனது செல்போன் தவிர வேறு எதையும் எடுத்து செல்லவில்லை. அமலாக்கத்துறையை போன்று என்.ஐ.ஏ.வை கொண்டும் சிறுபான்மை அமைப்புகளை அச்சுறுத்த நினைக்கிறார்கள். இந்த வழக்கை நீதிமன்றம் மூலம் நாங்கள் சந்திப்போம். மக்கள் மன்றம் மூலம் என்.ஐ.ஏ. முகத்திரையை கிழிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீதும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதே போன்று திருச்சி, கோவை, திருப்பூர், விழுப்புரம், மயிலாடுதுறை, மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் என்.ஐ.ஏ. போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து நேற்று காலை முதல் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

கோவையில்ரூ.90 ஆயிரம் பறிமுதல்

கோவை உக்கடம் அருகே கோட்டைமேடு பகுதியில் உள்ள அப்பாஸ் என்பவரது வீட்டில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவர் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் மாவட்ட செயலாளராக இருந்தவர்.

இவரது வீட்டிற்கு வந்த அதிகாரிகள் நீலநிற கோர்ட்டு அணிந்தும், அதில் என்.ஐ.ஏ. என்றும் பொறிக்கப்பட்டு இருந்த அடையாளத்துடன் வந்திருந்தனர். சுமார் 2 மணிநேரம் சோதனை நடத்தி, அவரிடம் இருந்த ரூ.90 ஆயிரம், செல்போன், ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி சென்றனர்.

மேலும் அப்பாஸ் கோவையில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

தஞ்சையில் 10 இடங்கள்

கொலை சம்பவம் நடந்த தஞ்சை மாவட்டத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 10 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். தஞ்சையில் உள்ள எஸ்.டி.பி.ஐ. ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் பக்ருதீன் வீட்டில் காலை 5.30 மணிக்கு தொடங்கிய சோதனை 10.15 மணி வரை நீடித்தது. இதில் ஒரு செல்போன், 2 பென் டிரைவ்களை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

இதேபோல் பாபநாசம் அருகே ராஜகிரி, அதிராம்பட்டினம், கும்பகோணம் அருகே திருவாய்ப்பாடி, திருமங்கலகுடி, திருபுவனம், மேலக்காவேரி, வடக்குமாங்குடி உள்ளிட்ட இடங்களிலும் இந்த சோதனை நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூரில் நிசார்அகமது என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியில் ஈடுபட்டனர். அங்கிருந்து 2 பென் டிரைவ், 1 ஹார்டு டிஸ்க், டைரி, செல்போன் ஆகியவை கைப்பற்றப்பட்டு சென்னை கொண்டு வரப்பட்டது.

திருச்சி, புதுக்கோட்டை

இதேபோல் திருச்சி பீமநகர் பண்டரிநாதபுரத்தில் உள்ள அப்சல்கான் என்பவரது வீட்டிலும், புதுக்கோட்டை உசிலங்குளத்தில் ரசீத் அகமது என்பவரது வீட்டிலும், திருப்பூரில் முபாரக் பாட்ஷா என்பவரது வீட்டிலும் சோதனை நடந்தது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள தொரவி கிராமத்தை சேர்ந்த நைனா முகமது என்பவரது வீட்டிலும், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில் உள்ள அவரது மற்றொரு வீட்டிலும் சோதனை நடந்தது.

அங்கிருந்து 3 செல்போன்கள், ஒரு லேப்டாப், ஒரு ஹார்டு டிஸ்க் கைப்பற்றியதாகஅதிகாரிகள் தெரிவித்தனர்.

துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு

தமிழ்நாட்டில் நடந்த சோதனை தொடர்பாக டெல்லியில் இருந்து என்.ஐ.ஏ. போலீசார் நேற்று மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மிகவும் கொடூரமான முறையில் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டார். இரு சமூகத்தினருக்கிடையே மோதலை உருவாக்கும் சூழலை இந்த சம்பவம் ஏற்படுத்தியது. அந்த வழக்கில் ஏற்கனவே சென்னையில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் 18 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர்களில் முகமது அலி ஜின்னா, அப்துல் மஜீத், புர்கானாசுதீன், சாகுல்ஹமீது, நபீல்ஹசன் ஆகிய 5 பேர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக கோர்ட்டு அறிவித்துள்ளது. அவர்களை கைது செய்ய துப்பு கொடுப்பவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும், என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுடைய வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

சோதனை நடத்தப்பட்ட இடங்களில் முக்கியமான ஆவணங்கள், செல்போன்கள், சிம் கார்டுகள் மற்றும் மெமரி கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story