சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்த வாலிபரை கடித்து இழுத்து சென்ற முதலை 3 மணி நேர தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு


சிதம்பரம் அருகே  கொள்ளிடம் ஆற்றில் குளித்த வாலிபரை கடித்து இழுத்து சென்ற முதலை  3 மணி நேர தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு
x

சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்த வாலிபரை முதலை கடித்து இழுத்து சென்றது. இதையடுத்து 3 மணி நேர தேடுதலுக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது.

கடலூர்

அண்ணாமலை நகர்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வடக்கு வேளக்குடியை சேர்ந்தவர் பக்கிரி மகன் திருமலை (வயது 18). இவர் நேற்று மதியம் 3.30 மணியளவில் தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பெரிய முதலை ஒன்று அங்கு வந்து திருமலையின் கையை கடித்து அவரை இழுத்தது. இதைபார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தபடி ஆற்றில் இருந்து கரையேறினர். பின்னர் அருகில் கிடந்த கற்களை எடுத்து எறிந்து முதலையை விரட்டினர். இருப்பினும் விட்டுவிடாமல் திருமலையை முதலை இழுத்து சென்றது.

படகு மூலம் தேடுதல்

இதையடுத்து தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சிதம்பரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிச்சாமி, கடலூர் கோட்ட உதவி வன பாதுகாவலர் பாலசுப்பிரமணியன், சிதம்பரம் வனச்சரக அலுவலர் சரண்யா, வனக்காப்பாளர் அமுதப்பிரியன் மற்றும் அலுவலர்கள் படகு மூலம் திருமலையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே இதுபற்றி அறிந்த சிதம்பரம் உதவி கலெக்டர் சுவேதா சுமன், உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

மேலும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியனும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டு துரிதப்படுத்தினார்.

உடல் மீட்பு

இந்நிலையில் சுமார் 3 மணி நேர தேடுதலுக்கு பின்னர் 6.30 மணியளவில் பழைய கொள்ளிடம் ஆற்றில் வடக்கு வேளக்குடி பகுதியில் திருமலையின் உடல் ஒதுங்கியது. இவரது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதையடுத்து அண்ணாமலைநகர் போலீசார், திருமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த வாலிபரை முதலை கடித்து இழுத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதே பழைய கொள்ளிடம் ஆற்றில் கடந்த ஆண்டு பழையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் கோபாலகிருஷ்ணன் என்பவர் குளித்து கொண்டிருந்த போது முதலை கடித்ததில் அவர் இறந்து போனது குறிப்பிடத்தக்கது.


Next Story