மதுரையில் நாட்டின நாய்கள் கண்காட்சி


மதுரையில் நாட்டின நாய்கள் கண்காட்சி
x

மதுரையில் நாட்டின நாய்கள் கண்காட்சி நடந்தது. இதை பார்வையாளர்கள் வியந்து ரசித்தனர்.

மதுரை

மதுரையில் நாட்டின நாய்கள் கண்காட்சி நடந்தது. இதை பார்வையாளர்கள் வியந்து ரசித்தனர்.

நாய்கள் கண்காட்சி

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் தேசிய அளவிலான நாட்டின நாய் வளர்ப்பு கருத்தரங்கம் மற்றும் நாட்டின நாய்களுக்கான கண்காட்சி நடைபெற்றது. மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ்சேகர் தலைமை தாங்கினார்.

கண்காட்சியை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார். தேனி கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய முதல்வர் ரிச்சர்டு ஜெகதீசன், மதுரை மண்டல இணை இயக்குனர் நடராஜகுமார், உதவி இயக்குனர்கள் டாக்டர்கள் ரவிச்சந்திரன், சரவணன், வைரவசாமி மற்றும் கால்நடைத்துறை மருத்துவ குழுவினர் பங்கேற்றனர். இதில் தேனி, திருச்சி, மதுரை, நெல்லை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை, ராஜபாளையம் மற்றும் கட்டைகால் என400-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன. நாய்கள் விதவிதமாக அணிவகுப்பு செய்தன. இதை பார்வையாளர்கள் வியந்து ரசித்தனர்.

சான்றிதழ்கள்

இந்த நாய்களுக்கு குட்டி நாய்கள், நடுத்தர நாய்கள், பெரிய நாய்கள் என 3 பிரிவாக பிரிக்கப்பட்டு ஆண் நாய்கள், பெண் நாய்களுக்கு தனித்தனியாக போட்டி நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற நாய்களுக்கு சான்றிதழ்கள், கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் போட்டியில் பங்கேற்ற அனைத்து நாய்களுக்கும் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

கண்காட்சியில் ஒரு பகுதியாக நாய் வளர்ப்போர் பயன்பெறும் வகையில் தேசிய அளவிலான நாட்டு நாய் வளர்ப்பு கருத்தரங்கம் நடந்தது. அதில் நாய்கள் பராமரிப்பு மற்றும் பராமரிப்பு மற்றும் உடல் நல பராமரிப்பு முறை குறித்து விளக்கப்பட்டது.

ராஜபாளையத்தில் ஆராய்ச்சி மையம்

இதில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்வகுமார் பேசும்போது:-

தமிழ்நாட்டில் முதல்முறையாக அரசு சார்பில் நாட்டின நாய்கள் கண்காட்சி மதுரையில் தான் நடத்தப்படுகிறது. இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.. இன்றைய போட்டியில் நான்கு இனங்களைச் சேர்ந்த 400 நாட்டின நாய்கள் பங்கேற்க உள்ளன. நாட்டின நாய்களை பாதுகாக்க அரசு சார்பில் ராஜபாளையத்தில் நாட்டின நாய்கள் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது. மன்னர் திப்புசுல்தான் அவரது படையில் 1500 சிப்பி பாறைகள் நாய்கள் வைத்திருந்தார். அந்த அளவிற்கு பாரம்பரியமான நாய்களை நாம் வளர்த்து வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story