நந்தனம் கல்லூரி இருபாலர் கல்லூரியாக மாற்றம்: உயர்கல்வித் துறை அரசாணை வெளியீடு


நந்தனம் கல்லூரி இருபாலர் கல்லூரியாக மாற்றம்: உயர்கல்வித் துறை அரசாணை வெளியீடு
x
தினத்தந்தி 14 Jun 2024 10:30 PM GMT (Updated: 14 Jun 2024 10:31 PM GMT)

சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரி, இனி இரு பாலர் பயிலும் கல்லூரி ஆக மாற்றப்படுகிறது.

சென்னை,

சென்னை நந்தனம் பகுதியில் அரசு ஆண்கள் கல்லூரி செயல்பட்டு வருகிறது. தற்போது சென்னைக்கு அருகில் உள்ள குன்றத்தூர், வடநெம்மேலி, பெரும்பாக்கம், திருவொற்றியூர், ஆர்.கே.நகர் பகுதிகளில் அரசு இருபாலர் கல்லூரிகள் தொடங்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருவதால் நந்தனம் ஆண்கள் கல்லூரியில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது.

எனவே இதனை கருத்தில் கொண்டு, 2024-25-ம் கல்வியாண்டில் இளநிலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கையினை அதிகரிக்கும் நோக்கிலும், அப்பகுதி மாணவிகள் பெருமளவில் பயன் அடையும் வகையிலும் நந்தனம் ஆண்கள் கல்லூரியை இருபாலர் கல்லூரியாக மாற்ற கல்லூரி முதல்வர் கோரியதன் அடிப்படையில் உரிய ஆணை வழங்குமாறு கல்லூரிக் கல்வி இயக்குனர் அரசிடம் கேட்டு இருந்தார்.

கல்லூரிக் கல்வி இயக்குனரின் கருத்துருவினை கவனமுடன் ஆய்வு செய்த அரசு, சென்னை நந்தனம் அரசு ஆண்கள் கல்லூரியினை நடப்பு கல்வியாண்டு (2024-25) முதல் இருபாலர் கல்லூரியாக மாற்றம் செய்தும், அக்கல்லூரியின் பெயரை நந்தனம் அரசு கலைக் கல்லூரி என பெயர் மாற்றம் செய்தும் உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் ஆ.கார்த்திக் அரசாணை வெளியிட்டுள்ளார்.


Next Story