நாகை தாமரைக்குளம் தென்கரை பகுதி பொதுமக்கள் சாலை மறியல்


நாகை தாமரைக்குளம் தென்கரை பகுதி பொதுமக்கள் சாலை மறியல்
x

நாகை தாமரைக்குளம் தென்கரை பகுதி பொதுமக்கள் சாலை மறியல்

நாகப்பட்டினம்

தகராறில் ஈடுபடும் நபர்களை கைது செய்யக்கோரி நாகை தாமரைக்குளம் தென்கரை பகுதி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல்

நாகை புதிய பஸ் நிலையம் அருகே தாமரைக்குளம் தென்கரை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புதிய பஸ் நிலையம் வரும் பஸ்கள், வாகனங்கள் ½ கிலோ மீட்டர் தூரம் செல்ல முடியாமல் நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தாமரைக்குளம் தென்கரை பகுதியில் உள்ள வீடுகளுக்குள், இரவு நேரங்களில் சிலர் புகுந்து பெண்களை தகாத முறையில் திட்டுகின்றனர். இளைஞர்களையும் படிக்க விடாமல், தொந்தரவு செய்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

கைது செய்ய வேண்டும்

இதனால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தாமரைக்குளம் தென்கரை பகுதியில் தொடர்ந்து தகராறில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய வேண்டும். இல்லையெனில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதன் பேரில் மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதனை தொடர்ந்து தாமரைக்குளம் தென்கரை பகுதியில் தகராறில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story