அரசு பள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நாகை போலீஸ் சூப்பிரண்டு


அரசு பள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நாகை போலீஸ் சூப்பிரண்டு
x
தினத்தந்தி 12 Sep 2023 6:45 PM GMT (Updated: 12 Sep 2023 6:47 PM GMT)

அரசு பள்ளியில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடிய நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், இலக்கை தெளிவாக வைத்திருக்க மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

நாகப்பட்டினம்


அரசு பள்ளியில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடிய நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், இலக்கை தெளிவாக வைத்திருக்க மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

நாகை போலீஸ் சூப்பிரண்டு

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வருபவர் ஹர்ஷ் சிங். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியேற்ற நாள் முதல் தனது எளிமையான நடவடிக்கைகளால் சக போலீசாரிடமும், பொதுமக்களிடமும் நன்மதிப்பை பெற்று வருகிறார். மேலும் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏதேனும் நடந்து விட்டது தெரிந்தால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்து வைப்பார்.

இதேபோல் ஏதேனும் குற்ற சம்பவங்கள் நடந்து விட்டால் அந்த இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்துவதுடன் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு உத்தரவிடுவதுடன் அதை தொடர்ந்து கண்காணித்தும் வருவார்.

இது தவிர ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் குறைதீர்க்கும் கூட்டங்களை நடத்தி போலீசார் மற்றும் பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை தீர்த்து வைத்து வருகிறார். இது தவிர 'உங்கள் எஸ்.பி.யிடம் பேசுங்கள்' என்று மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் போர்டு வைத்து உள்ளார். அதில் அவரது செல்போன் எண்ணை குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு மாதமும் போலீசார் பயன்படுத்தும் வாகனங்களை ஆய்வு செய்து வருகிறார். பொதுமக்களுக்கு, போலீசார் முன்மாதிரியாக திகழும் வகையில் அனைத்து போலீசாரும் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார்.

அரசு பள்ளியில் பிறந்தநாள் கொண்டாட்டம்

இந்த நிலையில் அவர் நேற்று தனது பிறந்தநாளையொட்டி நாகை வெளிப்பாளையம் நெல்லுக்கடை தெரு நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு தனது மனைவியுடன் வந்தார். அங்கு வந்த அவர், அந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுடன் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். மாணவ-மாணவிகளுக்கு கேக்கை ஊட்டி விட்டார்.

தொடர்ந்து நோட்டு, பென்சில், பேனா உள்ளிட்டவற்றை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங்குக்கு மாணவ-மாணவிகள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இலக்கை தெளிவாக வைத்திருக்க அறிவுரை

அப்போது அவர் பேசுகையில், உங்களை போலத்தான் நானும் சாதாரணமாக பள்ளி படிப்பை முடித்து இப்போது போலீஸ் அதிகாரியாக உங்கள் முன் நிற்கிறேன். முயற்சி செய்தால் எதையும் சாதிக்க முடியும். பள்ளி பருவத்தில் இருந்தே மாணவ-மாணவிகள் தங்களது இலக்கை தெளிவாக வைத்திருக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கி விடாமுயற்சியுடன் போராடினால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சந்திரயான் திட்ட விஞ்ஞானிகள் உங்களைப்போன்று அரசு பள்ளியில் படித்தவர்கள்தான். அவர்களால் சாதிக்க முடிந்ததை போல, உங்களாலும் சாதிக்க முடியும். எனவே மாணவர்கள் தங்கள் இலக்கை தெளிவாக தேர்ந்தெடுத்து அதனை அடைய போராட வேண்டும் என்றார்.

பாராட்டு

அரசு பள்ளி மாணவர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியதோடு மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தியதை அறிந்து பொதுமக்கள், போலீஸ் சூப்பிரண்டுக்கு பாராட்டு தெரிவித்தனர்.


Next Story