நாகை மீன்வள பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை:சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு


நாகை மீன்வள பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை:சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு
x

நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வருகிற 19-ந் தேதி நடக்கிறது.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வருகிற 19-ந் தேதி நடக்கிறது. நாகையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுகுமார் வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆன்லைனில் விண்ணப்பம்

நாகையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூலை மாதம் 8-ந் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டன. மொத்தம் 345 இடங்கள் கொண்ட பல்வேறு இளநிலை படிப்புகளுக்கு 6 ஆயிரத்து 520 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு 3 கல்லூரிகளிலும், பி.டெக் பட்டப்படிப்பு 4 கல்லூரிகளிலும், இளநிலை வணிக மேலாண்மை படிப்பு ஒரு கல்லூரியிலும், இளநிலை தொழில் நுட்பவியல் படிப்பு 3 கல்லூரிகளிலும் நடைபெற்று வருகின்றன.

தரவரிசை பட்டியல்

இந்த படிப்புகளில் சேருவதற்கான தரவரிசை பட்டியல் கடந்த 2-ந் தேதி பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. தூத்துக்குடியை சேர்ந்த மாணவன் ஆலன் ஜோஸ் ரோமிர் 199.50 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், தூத்துக்குடியை சேர்ந்த மாணவன் ராம்சந்தர், திருப்பூரை சேர்ந்த மாணவி ஷோபிகா ஆகியோர் 2-ம் இடத்தையும், தூத்துக்குடியை சேர்ந்த மாணவன் கார்த்திக் ராகுல் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பிற்கு ஒரு இடத்திற்கு 32 மாணவர்களும், பிற இளநிலை பட்டப்படிப்புகளுக்கு ஒரு இடத்திற்கு 10 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.

கலந்தாய்வு

விளையாட்டு வீரர், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், மீனவ குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ்நாடு அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் ஆகிய 5 சிறப்பு பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு வருகிற 19-ந் தேதி(திங்கட்கிழமை) நாகை மீன்வள பல்கலைக்கழக கலை அரங்கத்தில் நடைபெறுகிறது.இந்த பொது கலந்தாய்வு இணையதளம் மூலம் நடைபெற உள்ளது. முதற்கட்ட இணையதள கலந்தாய்வானது வருகிற 20-ந் தேதி முதல் வருகிற 26-ந் தேதி வரை நடைபெறும். கலந்தாய்வில் அனுமதி பெற்ற மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற நவம்பர் மாதம் தொடங்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story