முத்துமாரியம்மன்-கற்பகநாதர் கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்


முத்துமாரியம்மன்-கற்பகநாதர் கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
x

ஆரணி அருகே ராட்டினமங்கலம் சாலையில் உள்ள முத்துமாரியம்மன்-கற்பகநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி அருகே ராட்டினமங்கலம் சாலையில் உள்ள முத்துமாரியம்மன்-கற்பகநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகம்

ஆரணி - சேவூர் ஊராட்சிக்குட்பட்ட ராட்டினமங்கலம் சாலையில் முத்துமாரியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு அதன் அருகாமையில் இருந்த காலி இடத்தை முத்துமாரியம்மன் கற்பக நாதர் அறக்கட்டளையின் சார்பாக கிரயமாக பெற்று புதிதாக முத்துமாரியம்மன் கோவில் கற்பகாம்பிகை கற்பகநாதர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டது.

இதன் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதனையொட்டி நாவக்கினி யாக மண்டபத்தில் புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைக்கப்பட்டு கோவை திருப்போரூர் மணிவாசகர் அருட்பணி மன்ற அறக்கட்டளையின் தலைவர் வேள்விச்சதுரர் ப.குமரலிங்கனார் குழுவினர் தமிழ் முறைப்படி வேத மந்திரங்கள், சிவபுராணம் பாடியபடி யாக பூஜைகளை நடத்தினர்.

முன்னதாக திருக்கயிலாய பரம்பரை மெய் கண்ட சந்தானம், பேரூராதீனம் 25-வது குரு மகா சன்னிதானம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், கவுமார மடாலயம் கவுமார மரபு தண்டபாணி சுவாமிகள், 4-ம் பட்டம் குரு மகா சன்னிதானம் ராமானந்த குமரகுருபர அடிகளார், கலவை சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோர் யாக பூஜைகளை தொடங்கி வைத்து கலந்து கொண்டனர்.

நேற்று யாக நிறைவு பூஜையில் ரத்தனகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள், ஜோதிடர் ரா.குமரேசன் ஆகியோர் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை தொடங்கி வைத்தனர்.

அப்போது மங்கள வாத்தியங்கள் பூதகன வாத்தியங்களுடன் பூஜிக்கப்பட்ட புனித நீர் கலச நீரினால் முகப்பு கோபுரம், கருவறை கோபுரங்கள் மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து முத்துமாரியம்மன் கற்பகாம்பிகை உடனமர் கற்பகநாதர் மற்றும் பரிவார சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றி மகா அபிஷேகம் நடத்தி, மகா அலங்காரம், மகா தீபாராதனையுடன் நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள்

விழாவில் முன்னாள் அமைச்சரான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., ஆரணி நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி, துணைத் தலைவர் பாரி பி.பாபு, ஒன்றிய குழு தலைவர்கள் கனிமொழி சுந்தர், பச்சையம்மாள் சீனிவாசன், துணை தலைவர் கே.டி.ராஜேந்திரன், சேவூர் ஊராட்சி மன்ற தலைவர் சர்மிளா தரணி, ராட்டினமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம், அக்ராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் தாட்சாயினிஅன்பழகன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் அ.கோவிந்தராசன், அருணா குமரேசன், உள்பட சிவனடியார்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருள்மிகு முத்து மாரியம்மன் கற்பகநாதர் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர். தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறுகிறது.


Next Story