முத்து மாரியம்மன் கோவில் திருவிழா


முத்து மாரியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 5 Aug 2023 7:00 PM GMT (Updated: 5 Aug 2023 7:01 PM GMT)

கோத்தகிரி அருகே முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் பறவை காவடி எடுத்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் பறவை காவடி எடுத்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கோவில் திருவிழா

கோத்தகிரி அருகே குமரன் காலனி கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி காலை 7 மணிக்கு கணபதி வேள்வி, 10 மணிக்கு காப்பு கட்டி கொடியேற்றம், 11 மணிக்கு அபிஷேக, அலங்கார பூஜை, மாலை 6 மணிக்கு அம்மன் அழைப்பு நடைபெற்றது.

விழாவின் 2-ம் நாளான நேற்று காலை 8 மணிக்கு பாண்டியன் பூங்காவில் இருந்து பெண்கள் உள்பட பக்தர்கள் பால் குடம், காவடி, பறவை காவடி ஏந்தியவாறும், அலகு குத்தியவாறு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து காலை 10 மணிக்கு அலங்கார பூஜை நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 3 மணிக்கு தமிழன்னை இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது.

விளையாட்டு போட்டிகள்

இரவு 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட புஷ்ப வாகனத்தில் வீற்றிருந்து முக்கிய வீதிகள் வழியாக அம்மன் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் கடைசி நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு அபிஷேக, அலங்கார பூஜை, மதியம் 12 மணி முதல் 2.30 மணி வரை குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது.

மதியம் 2.30 மணிக்கு மாவிளக்கு பூஜை, 3 மணிக்கு அம்மன் கரக ஊர்வலமாக சென்று திருவிடையாற்றல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


Next Story