பா.ம.க. பிரமுகர் வெட்டிக்கொலை


கும்பகோணம் அருகே முன் விரோதத்தில் பா.ம.க. பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தந்தை, மகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே முன் விரோதத்தில் பா.ம.க. பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தந்தை, மகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பா.ம.க. பிரமுகர்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரம் மேலானமேடு பகுதியை சேர்ந்தவர் திருஞானசம்பந்தம் (வயது51). இவர் பா.ம.க. முன்னாள் நகர தலைவர் ஆவார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இதனால் இருவருடைய குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலை சோழபுரம் அருகே மண்ணியாற்றங்கரை பகுதியில் திருஞானசம்பந்தம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

வெட்டிக்கொலை

அப்போது அங்கு சென்ற ராஜேந்திரன், அவருடைய மகன் மணிகண்டன் ஆகியோர் திருஞானசம்பந்தத்தை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் உடல் முழுவதும் வெட்டுக்காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த திருஞானசம்பந்தம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அவரை உறவினர்கள் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே திருஞானசம்பந்தம் பரிதாபமாக உயிரிழந்தார்.

வலைவீச்சு

இதையடுத்து போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக சோழபுரம் போலீசார் ராஜேந்திரன் மற்றும் அவருடைய மகன் மணிகண்டன் ஆகிய 2 பேர் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

உறவினர்கள் சாலை மறியல்

திருஞானசம்பந்தம் கொலை செய்யப்பட்டதை அறிந்த அவருடைய உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் படுகொலைக்கு போலீசாரின் அலட்சியப்போக்கே காரணம் எனக்கூறியும், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் கொலை செய்யப்பட்ட திருஞானசம்பந்தத்தின் உடல் வைக்கப்பட்டிருந்த கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி மற்றும் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பா.ம.க. பிரமுகர் படுகொலை செய்யப்பட்டது, அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story