பள்ளி மாணவர்களை அச்சுறுத்தும் குரங்குகளை கூண்டுகள் வைத்து பிடிக்க வேண்டும்


பள்ளி மாணவர்களை அச்சுறுத்தும் குரங்குகளை கூண்டுகள் வைத்து பிடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 20 March 2023 6:45 PM GMT (Updated: 20 March 2023 6:46 PM GMT)

அரகண்டநல்லூர் பகுதியில் பள்ளி மாணவர்களை அச்சுறுத்தும் குரங்குகளை கூண்டுகள் வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

அரகண்டநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து நகருக்குள் புகும் குரங்குகள் அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மதியம் வெட்டவெளியிலும், மரத்தடிகளிலும் அமர்ந்து சாப்பிடும் மாணவர்களின் உணவுகளை பறித்துச் சென்று விடுகிறது. இதனால் மாணவர்கள் சாப்பிட முடியாத நிலை உள்ளது. இதுதவிர பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மதிய உணவு எடுத்து வரும் பெற்றோர்களையும் இந்த குரங்குகள் விரட்டி, அச்சுறுத்தி வருவதால் அச்சத்துடனே, பள்ளிக்கு வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கடை தெருக்களில் பள்ளி மாணவர்கள் தின்பண்டம் வாங்கிக் கொண்டு நடந்து செல்லும்போது, தின்பண்டங்களையும் குரங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து பறித்துச் செல்கிறது. எனவே அரகண்டநல்லூர் பகுதியில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் குரங்குகளை கூண்டுகள் வைத்து பிடித்து தொலைவில் கொண்டு விட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story