காயமடைந்தவர்களுக்கு அமைச்சர் ரகுபதி ஆறுதல்


காயமடைந்தவர்களுக்கு அமைச்சர் ரகுபதி ஆறுதல்
x

நாட்டு வெடி மருந்து தொழிற்சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அமைச்சர் ரகுபதி ஆறுதல் கூறினார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே பூங்குடியில் நாட்டு வெடிமருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் இறந்தனர். 2 பேர் படுகாயத்துடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். முன்னதாக அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வெடி தயாரிப்பு தொழிற்சாலையில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதில் அவர்களது குடும்பத்தில் அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடா்பாக பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விபத்தானது அவர்களது கவனக்குறைவால் ஏற்பட்டது. அரசு உரிமம் வழங்கியதால் ஏற்பட்டதல்ல. பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணி செய்வதற்காக தொழிற்சாலைகள் முழுபாதுகாப்போடு இயங்கி வருகிறது. இது தொடர்பாக சோதனைகள் அடிக்கடி மேற்கொள்ளப்படுகிறது. இந்த விபத்தில் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வதற்கு ஒன்றுமே இல்லை. விபத்து நடந்ததும் உடனடியாக எங்களது மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ. உள்பட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர். எதிர்க்கட்சிகள் வேலை குற்றச்சாட்டு வைப்பது தான் என்றார். இதைதொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், அறந்தாங்கி, ஆலங்குடி ஆகிய பகுதிகளில் பாத யாத்திரை மேற்கொண்ட பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, அமைச்சர் ரகுபதி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் தண்டனை பெற்றவர் என கூறினார். இது தொடர்பாக புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டியில் கூறியதாவது:- என்னை தண்டனை பெற்றவராக அண்ணாமலை பேசியிருப்பது முட்டாள்தனமானது. இதற்கு நான் நீதிமன்றத்தில் வழக்கு கூட தொடுக்கலாம். ஆனால் நான் வழக்கு தொடர்ந்து அவருடன் சண்டை போட்டுக்கொள்ள விரும்பவில்லை. என் மீது எந்த தண்டனையும் கிடையாது. 2 நீதிமன்றங்களில் நான் விடுவிக்கப்பட்டவன். ஜெயலலிதா பழிவாங்கும் நோக்கத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு உரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது வரவேற்க கூடிய திட்டம். மக்களிடம் தவறாக எடுத்து சொல்வதற்காக விமர்சித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, முத்துராஜா எம்.எல்.ஏ., முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லபாண்டியன் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story