தியாகி சங்கரலிங்கனார் சிலைக்கு அமைச்சர் மரியாதை


தியாகி சங்கரலிங்கனார் சிலைக்கு அமைச்சர் மரியாதை
x

தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு தியாகி சங்கரலிங்கனார் சிலைக்கு அமைச்சர் சாத்தூா் ராமச்சந்திரன் மரியாதை செலுத்தினார்.

விருதுநகர்


தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு தியாகி சங்கரலிங்கனார் சிலைக்கு அமைச்சர் சாத்தூா் ராமச்சந்திரன் மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு தினம்

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு முதல் ஜூலை 18-ந் தேதி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு தினமாக கொண்டாட உத்தரவிட்டார். அதன்படி விருதுநகரில் தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது.

விருதுநகரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு மாணவர்கள் பேரணியை தொடங்கி வைத்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

கண்காட்சி

விருதுநகர் தேச பந்து திடலில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சிக்கு மாவட்ட செய்தி துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கண்காட்சியை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்து பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 1968-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த அண்ணா தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். இதனை ஒட்டி தற்போது மாநிலம் முழுவதும் ஜூலை 18-ந் தேதி தமிழ்நாடு தினமாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் விருதுநகருக்கு பெருமை என்பது தியாகி சங்கரலிங்கனார் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வலியுறுத்தி விருதுநகரில் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். அவரது நினைவை போற்றும் வகையில் விருதுநகரில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

மரியாதை

தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய அண்ணாவுக்கும் மரியாதை செலுத்தினோம்.

தமிழ்நாடு தினத்தை கொண்டாட உத்தரவிட்ட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கலெக்டர் ஜெயசீலன், விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், நகரசபை தலைவர் மாதவன், யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அதேபோல மக்கள் நீதி மய்யம் சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் தியாகி சங்கரலிங்கனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட நிர்வாகிகள் நாகராஜன், பன்னீர், ராஜலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story