மல்லூரில் விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு


மல்லூரில்  விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும்   நிறுவனத்தில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
x

மல்லூரில் உள்ள விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு நடத்தினார்.

சேலம்

சேலம்

விமான உதிரி பாகங்கள்

சேலம் அருகே உள்ள மல்லூர் அம்மாபாளையம் ஊராட்சியில் விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை நேற்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது அங்கு விமான உதிரி பாகங்கள் தயாரிக்கப்படும் விதம் குறித்து நேரில் பார்வையிட்டார். குறிப்பாக பாதுகாப்பு துறை சார்ந்த ராணுவ தடவாளங்களுக்கான விமான உதிரி பாகங்கள் தயாரிப்பு, போயிங் விமானங்களுக்காக பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள் தயாரிப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து அரியானூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய சட்டக்கல்லூரி கட்டுமான பணிகளை பார்வையிட்டார். பின்னர் சேலம் சேகோசர்வ் அலுவலகத்தில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு நடத்தினார். அப்போது அதிகாரிகளிடம் ஜவ்வரிசி தரம் குறித்து கேட்டு அறிந்து தரமான உணவு பொருட்கள் தயாரிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் சேலம் மாவட்டத்தில் கலப்பட உணவு பொருட்கள் கண்டறிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். தொடர்ந்து அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்களிடம் கோரிக்கைகள் குறித்து கேட்டு அறிந்தார்.

கல்வி வளர்ச்சி நாள்

அதன்பிறகு சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் விழாவில் கலந்து கொண்டு அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் அங்கு மாணவிகளுடன் அமர்ந்து செஸ் விளையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

காமராஜர் காலத்தில் பள்ளிகளில் இலவச கல்வி வழங்கப்பட்டது. கருணாநிதி காலத்தில் கல்லூரிகளில் இலவச கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டன. அதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காமராஜர், கருணாநிதி வழியில் கல்விக்கு பல்வேறு திட்டங்களை தற்போது செயல்படுத்தி வருகிறார். அதன்படி உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை, காலை நேர உணவுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும் வேலை வாய்ப்புகளை உருவாக்க பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்து செயல்படுத்தப்படுகிறது என்றார்.

கலெக்டர்

அப்போது மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ், பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அதிகாரி மேனகா, மாநகராட்சி துணை மேயர் சாராதாதேவி உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story