தர்மபுரி மல்லிகார்ஜூனேஸ்வரர், பரவாசுதேவ சாமி கோவில்களில்ரூ.1.55 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைஅமைச்சர் சேகர்பாபு பேட்டி


தர்மபுரி மல்லிகார்ஜூனேஸ்வரர், பரவாசுதேவ சாமி கோவில்களில்ரூ.1.55 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைஅமைச்சர் சேகர்பாபு பேட்டி
x
தினத்தந்தி 14 Sep 2023 7:00 PM GMT (Updated: 14 Sep 2023 7:00 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர், பரவாசுதேவ சாமி கோவில் ரூ.1.55 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பி.கே. சேகர்பாபு கூறினார்.

அமைச்சர் ஆய்வு

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு கோவில்களில் ஆய்வு செய்தார். அதன்படி நல்லம்பள்ளி தாலுகா கோபாலம்பட்டியில் உள்ள பேட்டராய சாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் மற்றும் பரவாசுதேவ சாமி கோவில்களில் ரூ.14 லட்சத்தில் தேர் புதுப்பிக்கும் திருப்பணிகளை தொடங்கி வைத்து கோவில்களிலும் ஆய்வு மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் பக்தர்களின் கோரிக்கைகளான திருமண மண்டபம், குடிநீர், கழிவறை வசதி மற்றும் விளக்கேற்றும் இடம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இ-டெண்டர்

தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர், பரவாசுதேவ சாமி கோவிலில் தற்போது மண்டல மற்றும் மாநில குழுக்களின் ஒப்புதல் பெறப்பட்டு ரூ.1.55 கோடியில் இ-டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் உறுதி செய்யப்பட்ட பின்னர் விரைவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் இந்த கோவில்களில் தேர் புதுப்பிக்கும் பணிகள் முடிக்கப்பட்டு தை மாதத்தில் பக்தர்கள் வழிபடவும், தேரோட்டம் நடத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது கலெக்டர் சாந்தி, வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா, இணை ஆணையர் சபர்மதி, முன்னாள் தி.மு.க. நகர செயலாளர் அன்பழகன், மாவட்ட கவுன்சிலர் மாது சண்முகம், ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, கோவில் செயல் அலுவலர்கள் ஜீவானந்தம் ராஜகோபால் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story