மேட்டூர் அணை நீர்மட்டம் 118.91 அடியாக உயர்வு


மேட்டூர் அணை நீர்மட்டம் 118.91 அடியாக உயர்வு
x

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைவாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.

மேட்டூர்,

கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 10,656 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 10,417 கன அடியாக சரிந்தது.

இன்று காலை நீர்வரத்து சற்று குறைந்து விநாடிக்கு 9,536 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 5 ஆயிரம் கன அடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இதனிடையே டெல்டா மாவட்டங்களில் பாசனத் தேவை குறைந்துள்ளதால் நீர்திறப்பு விநாடிக்கு 2,600 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இதில் நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 2,000 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றிலும், கிழக்கு மேற்கு கால்வாயில் 600 கன அடி வீதம் தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளன.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைவாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. நேற்று காலை 118.62 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 118.91 அடியாக உயர்ந்தது.


Next Story