குடிநீரின் அளவை கண்காணிக்க மீட்டர் பொருத்தம்


குடிநீரின் அளவை கண்காணிக்க மீட்டர் பொருத்தம்
x
தினத்தந்தி 26 Sep 2023 9:45 PM GMT (Updated: 26 Sep 2023 9:45 PM GMT)

ஊராட்சிகளுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீரின் அளவை கண்காணிக்க தொட்டிகளில் மீட்டர் பொருத்தப்பட்டு வருவதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

ஊராட்சிகளுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீரின் அளவை கண்காணிக்க தொட்டிகளில் மீட்டர் பொருத்தப்பட்டு வருவதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

குடிநீர் திட்டங்கள்

பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு தாலுகாக்களில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 295 வழியோர கிராமங்களுக்கான குடிநீர் திட்டம் உள்பட 5 குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 110 கிராம ஊராட்சிகள், 7 பேரூராட்சி பகுதிகளில் உள்ள மக்கள் பயன்பெறுகின்றனர். இந்த திட்டங்களுக்கு குடிநீர் வழங்க 39.32 மில்லியன் லிட்டர் தண்ணீர் ஆற்றில் இருந்து எடுக்கப்படுகிறது.

இந்தநிலையில் ஊராட்சிகளுக்கு குடிநீர் சீரான முறையில் வினியோகம் செய்வதில்லை என புகார்கள் எழுந்தன. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஊராட்சிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் குடிநீரின் அளவை கண்காணிக்க மீட்டர் பொருத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

மீட்டர் பொருத்தம்

அம்பராம்பாளையம் ஆழியாற்றில் தண்ணீரை எடுத்து சுத்திகரித்து பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு ஊராட்சிக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வடசித்தூர், பனப்பட்டி போன்ற கடைக்கோடியில் உள்ள கிராமங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு குடிநீர் செல்வதில்லை என்று புகார் தெரிவிக்கின்றனர். மேலும் சில ஊராட்சிகளுக்கு அதிகமாகவும் குடிநீர் வழங்குவதாக கூறுகின்றனர்.

இதற்கு தீர்வு காண்பதற்கு ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் மீட்டர் பொருத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவை கணக்கிட முடியும். கூடுதலாகவும், குறைவாகவும் கொடுக்கப்பட்டு இருந்தால் கண்டுபிடித்து விடலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story