மீனாட்சி அம்மன் கோவில் யானையை தாக்கியதில் ரத்தம் வழிந்ததால் பரபரப்பு


மீனாட்சி அம்மன் கோவில் யானையை தாக்கியதில் ரத்தம் வழிந்ததால் பரபரப்பு
x

மீனாட்சி அம்மன் கோவில் யானையை தாக்கியதில் ரத்தம் வழிந்ததால் பரபரப்பு

மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆடி திருவிழா வீதி உலாவின் போது கோவில் யானையை தாக்கியதில் ரத்தம் வழிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆடி முளைக்கொட்டு உற்சவம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்தாண்டுக்கான ஆடி முளைக்கொட்டு திருவிழா கடந்த 28-ந் தேதி தொடங்கி வருகிற 8-ந் தேதி வரை நடக்கிறது.

8-ம் நாள் விழாவான நேற்று காலை அம்மன் வீதி உலா நடந்தது. அப்போது கோவில் யானை பார்வதி, ஊர்வலத்தின் முன்பாக நடந்து சென்றது. வடக்கு-கிழக்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள16-ம் கால் மண்டபத்தில் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. அப்போது யானை, அம்மனை 3 முறை வலம் வந்து மண்டியிட்டு துதிக்கையை தூக்கி வணங்குவது வழக்கம்.

அம்மனை யானை வணங்க வைக்க பாகன் முயற்சித்தார். அப்போது அது பிளிறியதாகவும், அதைக்கண்டு பக்தர்கள் பயந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.

உடனே பாகன் யானையை கட்டுப்படுத்த அங்குசத்தால் தாக்கியதில் யானையின் உடலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்ததாக தெரியவருகிறது. உடனே பாகன் யானையை அங்கிருந்து அழைத்து சென்றார். மேலும் யானை சென்ற இடத்தில் ரத்தம் வழிந்து இருந்ததாக பக்தர்கள் வேதனை அடைந்தனர். ஏற்கனவே யானை பார்வதி, கண் புரை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

புகார்

இந்த சம்பவம் குறித்து மேல அனுப்பானடியை சேர்ந்த பெண் பக்தர் தேன்மொழி, புகார் கடிதம் ஒன்று அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

காலை 10 மணிக்கு மீனாட்சி அம்மன் சப்பரத்துடன் வடக்கு ஆடிவீதியில் வலம் வந்த போது, உடன் வந்த பார்வதி யானையை பாகன் அடித்து துன்புறுத்தினார். அதில் யானைக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இது பக்தர்கள் அனைவரையும் வேதனை அடைய செய்தது. இதுகுறித்து கேட்ட போது யானையை தாக்கியவர் யானை பாகன் இல்லை என்றும், அவரது மகன் என்றும் தெரிவித்தனர். யானைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கோவில் அதிகாரி செல்லத்துரைக்கு போன் மூலம் பேசினேன். அவர் யானைக்கு தேவையான மருத்துவ சிகிச்சை உடனே செய்வதாக தெரிவித்தார். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து அதன் மூலம் யானையை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். வாயில்லா ஜீவன்களை நாம் பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு்ள்ளது.

இதுபற்றி கோவில் துணை கமிஷனர் அருணாசலம் கூறும்போது, சம்பவம் பற்றி விசாரித்து வருகிறோம் என தெரிவித்தார்.


Next Story