நீர்நிலைகளை பாதுகாத்து நிலத்தடி நீரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்


நீர்நிலைகளை பாதுகாத்து நிலத்தடி நீரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
x
தினத்தந்தி 4 Oct 2023 6:45 PM GMT (Updated: 4 Oct 2023 6:46 PM GMT)

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நீர்நிலைகளை பாது காத்து நிலத்தடி நீரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் சங்கீதா இன்பம் தெரிவித்தார்.

விருதுநகர்

குடிநீர் வசதி

சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் கூறியதாவது, சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த காலங்களில் வாரத்திற்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. திருத்தங்கல் மண்டல பகுதியில் இந்த இடைவெளி நாட்கள் அதிகமாக இருக்கிறது. இதனை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக பல இடங்களில் குடிநீர் வீணாக்கப்படுகிறது. இதனை மக்கள் சரியான முறையில் கையாண்டால் குடிநீர் வீணாவது தவிர்க்கப்படும். மேலும் சிவகாசியை சுற்றி உள்ள நீர்நிலைகளை உரிய முறையில் பராமரித்து மழைநீரை தேக்கி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

முழு கவனம்

தற்போது பெரியகுளம் கண்மாய், சிறுகுளம் கண்மாய், பொத்துமரத்து ஊருணி மற்றும் நகரில் உள்ள 200-க்கும் மேற்பட்ட பொது கிணறுகள் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு அதில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு நிலத்தடி நீரின் அளவை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்கு சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் முன் வந்துள்ளது. இது வரவேற்க வேண்டியது. அடுத்து வரும் காலங்களில் அனைத்து நீர்நிலைகளும் உரிய முறையில் பாதுகாக்கப்படும். சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்குவதில் மாநகராட்சி நிர்வாகம் முழுகவனம் செலுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story