கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை-குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தகவல்


கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை-குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தகவல்
x

புதுக்கோட்டை நகராட்சியில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை

குடிநீர் தட்டுப்பாடு

புதுக்கோட்டை நகராட்சியில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். சென்னையில் இருந்து இணை தலைமை பொறியாளா் லிங்கமூர்த்தி தலைமையில் திருச்சி மேற்பார்வை பொறியாளர் மாதவன், நிர்வாக பொறியாளர் அயினான், உதவி பொறியாளர்கள் ஜெயச்சந்திரன், கருப்பையா ஆகியோர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் திலகவதி செந்தில், நகராட்சி ஆணையர் நாகராஜன் மற்றும் நகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

புதுக்கோட்டை நகராட்சியில் குடிநீர் தேவைக்காக தினமும் 16 எம்.எல்.டி. தண்ணீர் தேவைப்படுகிறது. (ஒரு எம்.எல்.டி. என்பது 10 லட்சம் லிட்டர்) தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் குறைவாக உள்ளதால் 5 முதல் 6 எம்.எல்.டி. தண்ணீர் தான் கிடைக்கப்பெற்று வினியோகிக்கப்படுகிறது. இந்த தண்ணீரால் 2 வாரத்திற்கு ஒரு முறை தான் குடிநீர் நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.

மேட்டூர் அணை

இந்த நிலையில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் அதனை சமாளிப்பதற்காக தினமும் 10 எம்.எல்.டி. தண்ணீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, இணை தலைமை பொறியாளா் லிங்கமூர்த்தி கூறுகையில், ''தமிழகம் முழுவதும் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அந்தந்த மாவட்டங்களில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. புதுக்கோட்டையில் குடிநீர் தேவைக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 10 எம்.எல்.டி. தண்ணீர் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும். குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விட அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜீயபுரத்தில் காவிரி ஆற்றில் தற்போது சிறிதளவே தண்ணீர் வருகிறது. அதன்மூலம் சீராக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.'' என்றார்.


Next Story