மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்படுவதற்கு மயிலாடுதுறை விவசாயிகள் வரவேற்பு


மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்படுவதற்கு மயிலாடுதுறை விவசாயிகள் வரவேற்பு
x

டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்படுவதற்கு மயிலாடுதுறை விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை:

டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்படுவதற்கு மயிலாடுதுறை விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

முப்போக சாகுபடி

டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி ஜூன் 12-ந்தேதியோ அல்லது அதற்கு முன்னதாகவோ தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும், தாமதமாக திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து, சம்பா சாகுபடி பரப்பளவு அதிகாரிக்கும்.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை விரைவில் நிரம்பும் நிலையை எட்டி உள்ளது. இதனால் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முன்னதாக திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

முன்கூட்டியே மேட்டூர் அணை திறப்பு

இதை தொடர்ந்து டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக தண்ணீர் திறக்கப்படும் ஜூன் 12-ந்தேதிக்கு முன்பாக மே மாதத்திலேயே வருகிற 24-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) மேட்டூ்ர் அணை திறக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார்.

இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் கூறியதாவது:-

காவிரி டெல்டா பாசனதாரர்கள் சங்க தலைவர் குரு.கோபிகணேசன்:- முன்னதாகவே வருகிற 24-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன். விவசாயிகள் இதுவரை 30 சதவீதம் அளவில் குறுவை சாகுபடிக்காக நாற்றுகள் பயிரிட்டுள்ளனர். முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்படுவதால் 100 சதவீத அளவில் நாற்றுகள் பயிரிட வாய்ப்பு உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 70 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு 1 லட்சத்து 5 ஆயிரம் டன் நெல் அறுவடை செய்யப்பட்டது. இந்த ஆண்டு முன்னதாக தண்ணீர் திறப்பதால் கடந்த ஆண்டை விட கூடுதலாக நெல் அறுவடை செய்ய வாய்ப்புள்ளது.

தூர்வாரும் பணிகள்

டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் அன்பழகன்:- முன்கூட்டியே மேட்டூர் அணை திறப்பது குறுவை சாகுபடி பணிகளில் ஈடுபட விவசாயிகளுக்கு சாதகமாக அமையும். அதேசமயம் டெல்டா மாவட்டங்களில் நடைபெற்றுவரும் ஆறுகள், வடிகால், பாசன வாய்க்கால் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தை சேர்ந்த கல்யாணம்:- முன்கூட்டியே மேட்டூர் அணை திறப்பதன் மூலம் குறுவை, சம்பா, தாளடி உள்ளிட்ட முப்போகம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடின்றி விவசாயம் மேற்கொள்ளலாம் என்ற நம்பிக்கை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

மகிழ்ச்சி அளிக்கிறது

சீர்காழி அருகே மகாராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன்:- முன்கூட்டியே வருகிற 24-ந்் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு உடனடியாக ஆறு, வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளை முழுமையாக விரைந்து முடிக்க வேண்டும். கடைமடை வரை தண்ணீர் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறப்பது வரவேற்கத்தக்கது.


Next Story