மழவராயநல்லூர் கிராம மக்கள் திடீர் மறியல்


மழவராயநல்லூர் கிராம மக்கள் திடீர் மறியல்
x

எழுமூர் செல்லும் சாலையில் சகடை தேரை நிறுத்தி மழவராயநல்லூர் கிராம மக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள மழவராயநல்லூர் கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் 2 பேர் ஊருக்கு பொதுவான இடத்தை ஆக்கிரமித்து தங்களது டிராக்டரை நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இந்த டிராக்டரை அப்புறப்படுத்தி மாரியம்மன் கோவில் சகடை தேரை அங்கு நிறுத்த வேண்டும் என அந்த ஊரைச்சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை 10 மணியளவில் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு டிராக்டரை அப்புறப்படுத்தினர். இதனால் அந்த சகோதரர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் சகடை தேரை எழுமூர் செல்லும் சாலையில் நிறுத்திவிட்டு திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் எந்தவித தீர்வும் ஏற்படாததால் இருதரப்பையும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு தெரிவித்துவிட்டு அங்கிருந்த சகடை தேரை அப்புறப்படுத்தினர். அதன்பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தனர். இந்த சம்பவம் காரணமாக மழவராயநல்லூர் கிராமத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story