தண்ணீர் இன்றி காய்ந்து வரும் மக்காச்சோள பயிர்கள்


தண்ணீர் இன்றி காய்ந்து வரும் மக்காச்சோள பயிர்கள்
x
தினத்தந்தி 10 Jun 2023 6:45 PM GMT (Updated: 10 Jun 2023 6:45 PM GMT)

லக்கிநாயக்கன்பட்டி பகுதியில் தண்ணீர் இன்றி காய்ந்து வரும் மக்காச்சோள பயிர்கள் விவசாயிகள் கவலை

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாள விளங்கி வருகிறது. இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் நெல், கரும்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, உளுந்து உள்ளிட்ட பயிர்கள் மற்றும் பருவ கால பயிர்களான காய்கறிகளையும் சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். இதில் பெரும்பாலும் கிணற்று தண்ணீரை பயன்படுத்தியே அதிக அளவில் பயிர் சாகுபடி நடைபெற்று வருகிறது. சில இடங்களில் தண்ணீர் பற்றாக்குறையும் நிலவி வருகிறது. இதை போக்கும் வகையில் மலை அடிவாரப்பகுதி கிராமங்களான புளியங்கோட்டை, லக்கிநாயக்கன்பட்டி, புதுப்பாட்டு, ரங்கப்பனூர், புத்திராம்பட்டு ஆணைமடுவு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் சொட்டு நீர் பாசன முறைகளை பயன்படுத்தி மரவள்ளி, மஞ்சள், மக்காச்சோளம், மணிலா உள்ளிட்ட பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

ஆனால் சொட்டுநீர் பாசனத்துக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் கடந்த 40 நாட்களுக்கு முன்பு பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிர்கள் தண்ணீர் இன்றி சுட்டெரிக்கும் வெயிலில் காய்ந்து கருகி வருகிறது. கடன்வாங்கி சாகுபடி செய்து வந்த விவசாயிகள் பயிர் கருகி நிற்பதை கண்டு கண்கலங்கி வருகின்றனர். இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, கிடைத்த சிறிதளவு நீரை பயன்படுத்தி சொட்டு நீர் பாசன முறையில் பயிர் சாகுபடி செய்து வந்தோம். தற்போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மழை வரும் என்று எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. சுட்டெரித்து வரும் வெயிலை தாக்குப்பிடிக்க முடியாமல் இப்பகுதியில் சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் கருகி வருவது வேதனையாக உள்ளது. பயிர் வளர்ந்து 3 மாதம் ஆன நிலையில் காய்ந்து வருவதால் சாகுபடிக்காக வாங்கிய கடனை எப்படி திருப்பி செலுத்த போகிறோம் என்று தெரியாமல் தவித்து வருகிறோம். எனவே தமிழக அரசு எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் பாசனத்துக்கு தேவையான தண்ணீர் வசதியை செய்து தர வேண்டும் என வேதனையோடு கூறினா்.


Next Story