மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஆகஸ்டு மாதத்திற்குள் நடத்தப்படும்; அமைச்சர் சேகர்பாபு பேட்டி


மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஆகஸ்டு மாதத்திற்குள் நடத்தப்படும்; அமைச்சர் சேகர்பாபு பேட்டி
x

மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஆகஸ்டு மாதத்திற்குள் நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

பெரம்பலூர்

பெரம்பலூர்:

பார்வையிட்டு ஆய்வு

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் மற்றும் அதன் உபகோவிலான பெரியசாமி மலை கோவில்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலில் அவர் மதுரகாளியம்மனை தரிசனம் செய்துவிட்டு கோவிலை சுற்றி பார்த்தார்.

அப்போது கோவில் சார்பாக விரைவில் தங்கத்தேர் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, அவர் பெரியசாமி மலை கோவில்களுக்கு சென்று அங்கு சேதப்படுத்தப்பட்டுள்ள செல்லியம்மன் உள்ளிட்ட சாமி சிலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கும்பாபிஷேகம்

ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர். இதையடுத்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிகளை விரைந்து முடித்து வருகிற ஆகஸ்டு மாதத்திற்குள் கும்பாபிஷேகத்தை நடத்துவதற்கு துறை அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கி இருக்கிறோம். மேலும் பெரியசாமி மலை கோவில்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றி ஓராண்டுக்குள்ளாக பக்தர்கள் சிரமமின்றி இங்கே வந்து தரிசனம் செய்வதற்கும், தொன்மை மாறாமல் பழைய நிலையிலேயே இந்த கோவில்களின் சிலைகளை புதுப்பிப்பதற்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அவருடைய உத்தரவை பெற்று, இந்து சமய அறநிலையத்துறை முழுமையாக இந்த பணிகளை மேம்படுத்துவதற்காக அதிக அக்கறையோடு செயல்படும்.

கோவில் நிலங்களை மீட்கும் பணி

முதல்-அமைச்சர் உத்தரவின்படி 38 மாவட்டங்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இதுவரையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களுக்கு சொந்தமான இடங்களை அளவீடு செய்து, கல் பதித்து, வேலிகளை அமைத்து வருகிறோம். நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலங்களை மீட்டு இருக்கிறோம்.

ஒரு சில இடங்களில் கோவில் பெயரில் இருந்ததையே பட்டா மாற்றம் செய்து இருக்கிறார்கள். அதில் இந்துசமய அறநிலையத்துறைக்கு ஒத்துப்போகின்ற இடங்களை தற்போது பதிவேற்றம் செய்து கொண்டு வருகிறோம். ஒத்துப்போகாத இடங்களுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் மேல்முறையீடு செய்து அந்த நிலங்களை மீட்கும் பணி ேமற்கொள்ளப்பட்டிருக்கிறது.

விமர்சனம் குறித்து கவலையில்லை

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் புனரமைப்பு பணிகளுக்கு போதிய நிதியை இந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கி விரைவாக இந்த பணிகளை மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். தமிழக அரசை பற்றி பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விமர்சிப்பது குறித்து கவலைப்படாமல் எங்களுடைய பாதை, எங்களுடைய பயணம் மக்களை நோக்கி செல்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story