மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் விரைவில் தொடக்கம் - அமைச்சர் பி.கே.சேகர்பாபு
ராமேசுவரம் ராமநாதசாமி, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆகிய 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் விரைவில் தொடங்குவது குறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
நாள் முழுவதும் அன்னதானம்
சென்னை, நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் சட்டசபையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் குறித்து அனைத்து அலுவலர்களுடன் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆலோசனை நடத்தினார்.
கோவில்களின் மேம்பாடுத்துவது குறித்து மாதம்தோறும் இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் மற்றும் உதவி கமிஷனர்களுடன் சீராய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு சட்டசபை அறிவிப்பில் 112 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு அதில் 90 சதவீத பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதேபோல் இந்தாண்டு மானியக் கோரிக்கையில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 165 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த அறிவிப்புகள் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்படுத்தப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட இருக்கிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், ராமேசுவரம் ராமநாதசாமி கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ஆகிய 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் தொடங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆன்மிக பயணம்
கோவில் யானைகளுக்கு புதிய குளியல் தொட்டி அமைப்பது, மாதந்தோறும் பவுர்ணமி தினங்களில் 12 பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் 108 விளக்குப் பூஜைகள் நடத்துவது தொடர்பாகவும், ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசாமி கோவிலுக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்வது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் பி.சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், திருமகள், சி.ஹரிப்ரியா மற்றும் அனைத்து மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கும்பாபிஷேகம்
சென்னை நங்கநல்லூர், பக்த ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டனர்.
மேலும், இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன், இணை கமிஷனர் ரேணுகா தேவி, ராஜம், வெங்கடேச பட்டாச்சாரியார், கோவில் பட்டாச்சாரியார் பார்த்தசாரதி மற்றும் கோவில் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.