மதுரை மல்லிகை கிலோ ரூ.1800-க்கு விற்பனை


மதுரை மல்லிகை கிலோ ரூ.1800-க்கு விற்பனை
x

மதுரை மல்லிகை கிலோ ரூ.1800-க்கு விற்பனை

மதுரை

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மதுரை மல்லிகை பூவின் விலை ஒரு கிலோ ரூ.1800-க்கு நேற்று விற்பனையானது.

விநாயகர் சதுர்த்தி விழா

விநாயகர் சதுர்த்தி விழா இன்று (புதன்கிழமை) விமரிசையாக கொண்டாடப்படுகிறது.இதையொட்டி மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லிகை பூவானது ரூ.1800-க்கு விற்பனையானது. காலையில் மல்லிகை பூவின் விலை குறைவாகவும் நேரம் செல்லச்செல்ல அதிகமாகவும் இருந்தது.

பிச்சி கிலோ ரூ.1200, முல்லை ரூ.1000, சம்பங்கி ரூ.300, பட்டன்ரோஸ் ரூ.250 என மற்ற பூக்களின் விலையும் சற்று அதிகமாகவே இருந்தது. பூக்களின் தேவை அதிகம் என்பதால் மல்லிகை பூக்கள் உள்ளிட்ட அனைத்து பூக்களையும் வாங்குவதற்கு நேற்று மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது.

வரத்துகுறைவு

இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறியதாவது:-

மதுரை மல்லிகைப்பூவுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. மதுரை பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக மல்லிகை பூவின் விலை கிலோ ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதேபோல் சம்பங்கி, அரளி, பிச்சி, முல்லை உள்ளிட்ட மற்ற பூக்களின் விலையும் சற்று குறைவாகவே இருந்தது.

விநாயகர் சதுர்த்தி விழா காரணமாக மல்லிகைப்பூவின் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. மக்கள் கூட்டம், கூட்டமாக பூக்களை வாங்கி சென்றனர். இதனால் விறுவிறுப்பாக வியாபாரம் நடந்தது. மழைக்காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ளது. மழை காரணமாக இனி வரும் நாட்களில் பூக்களின் விலை அதிகரித்தே இருக்கும் என எதிர்பார்க்கிறோம்," என்றனர்.


Next Story