முதுகலை மருத்துவப்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்ய முடியாது-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


முதுகலை மருத்துவப்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்ய முடியாது-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

முதுகலை மருத்துவப்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்ய முடியாது-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை

பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் டாக்டர்களாக பணியாற்றும் பாக்கியராஜ், புதியசாமி, ஆனந்த், ஸ்ரீநந்தினி ஆகியோர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

முதுநிலை மருத்துவப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளிலும் 50 சதவீத இடத்தை அரசு டாக்டர்களுக்கு ஒதுக்குவது தொடர்பான அரசாணை கடந்த 2020-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த அரசாணையை அமல்படுத்துவதால், மற்ற மாணவர்கள் முதுகலை மருத்துவப்படிப்பை படிக்க இடங்கள் கிடைப்பதில்லை. எனவே இந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், அரசு டாக்டர்களுக்கு முதுகலை மருத்துவப்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரி ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கும், மேல்முறையீட்டு வழக்கும் ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை மட்டுமே நடைபெற்று உள்ளது. எனவே அதன் சாதக, பாதகங்கள் குறித்து முழுமையாக அறியாமல் அந்த அரசாணையை ரத்து செய்ய முடியாது. இதனால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. எதிர்காலங்களில் இந்த அரசாணையினால் பாதிப்புகள் இருப்பின் மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட கோர்ட்டை அணுகலாம் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.


Next Story