19 மாநிலங்களில் ரூ.9 கோடி வசூலித்து ஏமாற்றிய வழக்கு:ஆன்லைன் மோசடி கும்பலை சேர்ந்த 2 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


19 மாநிலங்களில் ரூ.9 கோடி வசூலித்து ஏமாற்றிய வழக்கு:ஆன்லைன் மோசடி கும்பலை சேர்ந்த 2 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

ஆன்லைனில் பரிசுத்தொகை தருவதாக ஆசை வார்த்தை கூறி, நாடு முழுவதும் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய 2 பேரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


ஆன்லைனில் பரிசுத்தொகை தருவதாக ஆசை வார்த்தை கூறி, நாடு முழுவதும் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய 2 பேரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஆன்லைன் மோசடி கும்பல்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் சரத் சந்திரன். இவர் கட்டிட காண்டிராக்டர். சமூக வலைதளத்தில் சினிமா சம்பந்தமாக கருத்து கூறினால் பரிசுத்தொகை தருவதாக ஆசை கூறி, ஒரு கும்பல் இவரிடம் பணம் பறித்து உள்ளது. பல்வேறு தவணைகளாக இவரிடம் ரூ.8 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான தொகையை ஆன்லைன் மோசடி கும்பல் பறித்தது. இந்த தொகையை தர வேண்டுமானால் மேலும் குறிப்பிட்ட தொகையை வங்கி கணக்கில் செலுத்தும்படி மிரட்டியும் உள்ளனர். இதுகுறித்து அவர் விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இதில் அந்த கும்பல் நாடு முழுவதும் மோசடியில் ஈடுபட்டு இருந்தது தெரிந்தது. அதுசம்பந்தமாக 20 பேர் மீது வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

19 மாநிலங்களில் வழக்கு

இந்தநிலையில் இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த ஜெனீத் அகமது, ஜாவீத் அகமது ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வக்கீல் பா.நம்பிசெல்வன் ஆஜராகி, மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட ஆன்லைன் மோசடி கும்பலிடம் நாடு முழுவதும் ஏராளமானவர்கள் தங்களது பணத்தை பறிகொடுத்து உள்ளனர். இந்த மோசடி கும்பல் மீது 19 மாநிலங்களில் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த கும்பல் நாடு முழுவதும் ரூ.9 கோடி வரை மோசடி செய்து உள்ளனர்.

தள்ளுபடி

இந்த மோசடியில் மேலும் பலருக்கு தொடர்பு உள்ளது. எனவே மனுதாரர்களை காவலில் வைத்து போலீசார் விசாரித்தால்தான் பல்வேறு உண்மைகளை கண்டுபிடிக்க முடியும். இதை கருத்தில் கொண்டு இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதாடினார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Next Story