வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு


வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
x

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (வியாழக்கிழமை) உருவாகிறது என்றும், இது தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், இதன் காரணமாக 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

மழைப்பொழிவில் அதிக மழையை வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் தமிழகம் பெறுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்காக வடகிழக்கு பருவமழை காலம் கடந்த மாதம் (அக்டோபர்) தொடங்கியது. பருவமழை தொடங்கிய முதல் மழைப்பொழிவின்போது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட வட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.

அதனைத்தொடர்ந்து இடையில் சில நாட்கள் இடைவெளி விட்ட நிலையில், கடந்த 10-ந்தேதி வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக 2-வது மழைப்பொழிவு தொடங்கியது. இதில் டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சீர்காழியில் 122 ஆண்டுகள் வரலாற்றில் இல்லாத வகையில் 44 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.

இந்த மழையால் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்து இருக்கிறது. சில இடங்களில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்தநிலையில் வங்க கடலில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (வியாழக்கிழமை) உருவாகிறது.

தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்

ஏற்கனவே 16-ந்தேதி (நேற்று) இந்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்று கூறப்பட்ட நிலையில், அது தற்போது தள்ளிப்போய் இருக்கிறது. அந்த வகையில் இன்று உருவாகும், குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் (அதாவது 19-ந்தேதி) மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் சில இடங்களில் இன்றும், நாளையும் (வெள்ளிக்கிழமை), நாளை மறுதினமும் (சனிக்கிழமை) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டாலும், அந்த சில இடங்கள் என்பது தென் மாவட்டங்களில் சில பகுதிகளாக கூறப்படுகிறது.

மற்றபடி வட, உள் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழையின்றி, காலை நேரங்களில் சற்று பனிப்பொழிவு காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கனமழை

தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பிறகுதான், தமிழகத்தில் கனமழைக்கான வாய்ப்பு தொடங்குகிறது. இதன்மூலம் பருவமழை காலத்தில் 3-வது மழைப்பொழிவு கிடைக்கப்போகிறது.

அந்த வகையில் வருகிற 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களிலும், தமிழக உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

மழை அளவு

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ராஜபாளையம் 12 செ.மீ., ஆயிக்குடி 9 செ.மீ., சிவகிரி 7 செ.மீ., கருப்பாநதி அணை 6 செ.மீ., தென்காசி, வத்திராயிருப்பு தலா 5 செ.மீ., செங்கோட்டை, பாபநாசம், நாகுடி, பிலவாக்கல், கழுகுமலை தலா 3 செ.மீ., பார்வூட், ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், வால்பாறை தலா 2 செ.மீ., ஸ்ரீவைகுண்டம், மேட்டுப்பாளையம், நீடாமங்கலம், சாத்தான்குளம், கீழ்கோதையாறு, ஆவுடையார்கோவில், பாம்பன், மணிமுத்தாறு அணை, பேராவூரணி தலா 1 செ.மீ. மழை பெய்திருக்கிறது.


Next Story