ஏலச்சீட்டு நடத்தி பணம் மோசடி
வேப்பனப்பள்ளி அருகே ஏலச்சீட்டு நடத்தி பணம் மோசடி செய்த கணவன்-மனைவியை கைது செய்யக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே உள்ள வி.மாதேப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி முனிரத்தினம். இவர்கள் 2 பேரும் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இவர்களிடம் கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டவர்கள் சீட்டு பணம் கட்டி வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் கணவன், மனைவி 2 பேரும் திடீரென தலைமறைவாகினர். இதனால் பணம் கட்டி பாதிக்கப்பட்டவர்கள் இந்த மோசடி குறித்து வேப்பனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்-மனைவியை தேடி வந்தனர். இந்தநிலையில் ஏலச்சீட்டு நடத்தி பணம் மோசடி செய்த கணவன்-மனைவியை கைது செய்ய கோரி நேற்று வி.மாதேப்பள்ளியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேப்பனப்பள்ளி போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.