ஆம்ஸ்ட்ராங் மறைவு பட்டியலின மக்களுக்கு பேரிழப்பு - கமல்ஹாசன்


ஆம்ஸ்ட்ராங் மறைவு பட்டியலின மக்களுக்கு பேரிழப்பு - கமல்ஹாசன்
x

ஆம்ஸ்டராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது. கொலையாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், 8 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-

"பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அவரது மறைவு பட்டியலின மக்களுக்குப் பேரிழப்பாகும்.

ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் கூலிப் படையினரால், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story