பழுதாகி நின்ற லாரி, கார் மீது மற்றொரு லாரி மோதல்; டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம்


பழுதாகி நின்ற லாரி, கார் மீது மற்றொரு லாரி மோதல்; டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 20 May 2023 2:30 AM IST (Updated: 20 May 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே நான்கு வழிச்சாலையில் பழுதாகி நின்ற லாரி, கார் மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே நான்கு வழிச்சாலையில் பழுதாகி நின்ற லாரி, கார் மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

பழுதாகி நின்றது

தூத்துக்குடியில் இருந்து ராட்சத காற்றாடியின் இறக்கையை ஏற்றியபடி லாரி ஒன்று நேற்று முன்தினம் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை மராட்டியத்தை சேர்ந்த ஜோடா (வயது 45) என்பவர் ஓட்டினார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மினுக்கம்பட்டி பகுதியில் அந்த லாரி வந்தபோது திடீரென்று பழுதானது. இதனால் ஜோடா, லாரியை சாலையோரமாக நிறுத்தினர். மேலும் இரவு நேரம் வந்துவிட்டதால் பாதுகாப்புக்காக லாரியின் பின்னால் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அந்த காருக்குள் கர்நாடக மாநிலம் சிக்பலாப்பூரை சேர்ந்த சாந்தராஜூ (30) என்பவர் தூங்கி கொண்டிருந்தார்.

இதேபோல் தூத்துக்குடியில் இருந்து உப்பு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மற்றொரு லாரி வந்தது. இந்த லாரியை திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த ராஜா (45) என்பவர் ஓட்டினார்.

லாரி மோதல்

இந்தநிலையில் உப்பு ஏற்றி வந்த லாரி நேற்று அதிகாலை 5 மணி அளவில் மினுக்கம்பட்டி பகுதியில் வந்தது. அப்போது அங்கு ஏற்கனவே பழுதாகி நின்றிருந்த காற்றாடி இறக்கை ஏற்றி வந்த லாரியின் பின்னால் பாதுகாப்புக்காக நின்றிருந்த கார் மீது உப்பு ஏற்றி வந்த லாரி பயங்கரமாக மோதியது. அதன்பிறகு அந்த லாரி, காற்றாடி ஏற்றி வந்த லாரியின் பின்னால் மோதியது. இதில், உப்பு ஏற்றி வந்த லாரியின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் உப்பு லாரி டிரைவர் ராஜாவும், காரில் இருந்த சாந்தராஜூவும் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது லாரியின் இடிபாடுகளில் சிக்கியிருந்த ராஜா மற்றும் காரில் இருந்த சாந்தசாஜூ ஆகியோரை மீட்டனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story