சாராயம் விற்பனை செய்பவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்


சாராயம் விற்பனை செய்பவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 16 May 2023 6:45 PM GMT (Updated: 16 May 2023 6:45 PM GMT)

மயிலாடுதுறை மாவட்டத்தில் சாராயம் விற்பனை செய்பவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று திருச்சி மண்டல ஐ.ஜி.கார்த்திகேயன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை


மயிலாடுதுறை மாவட்டத்தில் சாராயம் விற்பனை செய்பவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று திருச்சி மண்டல ஐ.ஜி.கார்த்திகேயன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சாராயம் விற்பனை

விழுப்புரம் மாவட்டத்தில் சாராயம் குடித்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 40-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாராயத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்கள், சாராயம் விற்பவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் தாலுகா பகுதிகளில் உள்ள 14 போலீஸ் நிலைய சரகங்களில் சாராயம் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக மதுபானம் கடத்தி விற்பனையில் ஈடுபட்டு வந்த 68 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 5 ஆயிரத்து 470 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் தற்போது வரை மாவட்டத்தில் தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த 10 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் ஐ.ஜி. கார்த்திகேயன் பேசியதாவது:-

புதுச்சேரி மாநிலத்திற்கு அருகே உள்ள மாவட்டம் என்பதால் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சாராயம் கடத்தி வருவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி மாநிலத்தை இணைக்கும் எல்லை சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். சாராயம் விற்பனை செய்பவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஐ.ஜி.கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து மயிலாடுதுறை அருகே பண்டாரவாடை கிராமத்தில் கடந்த 13-ந் தேதி பிரபல ரவுடி கலைவாணன் தனது வீட்டிலேயே வெடிகுண்டு தயாரிக்கும் போது வெடிகுண்டு வெடித்ததில் 2 கைகளிலும் உள்ள 10 விரல்களும் சிதறி படுகாயம் அடைந்தார்.

சோதனை சாவடிகளில் ஆய்வு

அவரது வீட்டில் 2 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் அது தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார்.

முன்னதாக திருச்சி மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நண்டலாறு, குமாரமங்கலம், நல்லாடை உள்ளிட்ட அனைத்து எல்லை சோதனை சாவடியில் பாதுகாப்பு குறித்தும், சி.சி.டி.வி. பதிவுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.


Next Story