மது ஒழிப்பு மாநாடு, தேர்தல் அரசியலோடு தொடர்பு இல்லாத மாநாடு - திருமாவளவன்


மது ஒழிப்பு மாநாடு, தேர்தல் அரசியலோடு தொடர்பு இல்லாத மாநாடு - திருமாவளவன்
x

கோப்புப்படம்

மது ஒழிப்பு மாநாட்டில் வேறு எந்த அரசியல் கலப்பும் இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருச்சி,

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்டோபர் இரண்டாம் தேதி கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தில் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுக்கு விசிக அழைப்பு விடுத்திருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருமாவளவனின் எக்ஸ் வலைதளத்தில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பேசும் வீடியோ வெளியிடப்பட்டது. முதல் இரண்டு முறை இந்த வீடியோ வெளியிடப்பட்டு பின்னர் அது நீக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த வீடியோ பதிவிடப்பட்டது.

இந்நிலையில் மது ஒழிப்பு மாநாடு, தேர்தல் அரசியலோடு தொடர்பு இல்லாத மாநாடு என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "தேர்தல் அரசியலோடு மது ஒழிப்பு மாநாடு குறித்து பேசப்படுகிறது. 100 சதவீத தூய மனதோடுதான் மாநாட்டை ஏற்பாடு செய்கிறோம். மது ஒழிப்பு மாநாட்டில் வேறு எந்த அரசியல் கலப்பும் இல்லை. மாநாட்டை திசை திருப்பும் முயற்சிகள் வேண்டாம். மது ஒழிப்பு மாநாட்டில் திமுக மற்றும் அதிமுக பங்கேற்க வேண்டும்.

ஒருமித்து குரல் எழுப்புவதால் மதுபானக் கடைகளை மூட முடியும். மத்திய அரசுக்கும் மது ஒழிப்பில் பொறுப்பு இருக்கிறது. மது ஒழிப்பை முன்னெடுக்க அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். போதைப் பொருட்கள், மதுவை அனைவரும் இணைந்து ஒழிக்க வேண்டும். மதுவால் பல தரப்பட்ட மக்கள் பாதிக்கப்படுவதுடன், தேசத்தில் மனித வள இழப்பும் ஏற்படுகிறது

டுவிட்டர் பக்கத்தில் வீடியோவை பதிவிட்ட அட்மின் வாக்கியங்கள் முழுமை பெறாமல் இருந்ததால் அப்பதிவை நீக்கினார். பின்னர் என்னுடைய வழிகாட்டுதலின் அடிப்படையில் மீண்டும் அந்த வீடியோ பதிவு செய்யப்பட்டது. அதிகாரத்தை பகிர்ந்து அளிப்பதுதான் உண்மையான ஜனநாயகம். யாரையும் மிரட்டுவதற்காக வைக்கப்படும் கோரிக்கை அல்ல" என்று தெரிவித்தார்.

மது ஒழிப்பு மாநாட்டிற்கு பா.ம.க. ஆதரவு அளித்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "பா.ம.க. தங்களின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. எல்.கே.ஜி. படித்தாலும் சமூக பொறுப்புடன் நடந்து கொள்கிறோம் என்பதை மக்கள் புரிந்துக்கொண்டால் போதும். கடந்த காலத்தில் ஈழத்தமிழர் பிரச்சனை உள்ளிட்டவற்றில் பா.ம.க.வுடன் இணைந்து வி.சி.க. பயணித்துள்ளது. யாரையும் குறைத்து மதிப்பிடவோ காயப்படுத்தவோ நான் விரும்பவில்லை. பா.ம.க. உடன் தங்களால் இணைந்து பயணிக்க முடியாத நிலை உள்ளது. வெறுப்பு அரசியலை விதைத்தது பா.ம.க.தான். சிதம்பரத்தில் முன்பு நடந்த வன்முறைக்கு பா.ம.க. தான் காரணம். வி.சி.க.விற்கு எதிராக திட்டமிட்டு பா.ம.க. அவதூறு பரப்பியது. ரத்தக் கறையுடன் பா.ம.க.விடம் நாங்கள் கடந்த காலங்களில் கைகோர்த்தோம்" என்று திருமாவளவன் கூறினார்.


Next Story