சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை


சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x

சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

கரூர்

சிறுமி பலாத்காரம்

கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 37). இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தனியாக இருந்த 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். மேலும் வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

அந்த சிறுமி தனியாக இருக்கும் போது எல்லாம் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதால், அவரது தாய் சிறுமியிடம் விசாரித்துள்ளார். அப்போது திருமுருகன் தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறி கதறி அழுதுள்ளார்.

சிறையில் அடைப்பு

இதுகுறித்து சிறுமியின் தாய் கடந்த 8.7.2021 அன்று குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், 3 பிரிவுகளின் கீழ் திருமுருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் அந்த சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதை அடுத்து 23.7.2021 அன்று கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தபோது அங்கு அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து திருமுருகனை குளித்தலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆயுள் தண்டனை

இது தொடர்பான வழக்கு கரூர் மகிளா ேகார்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் நேற்று நீதிபதி நசீமா பானு தீர்ப்பு வழங்கினார். அதில், அத்துமீறி வீட்டிற்குள் நுைழந்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், சிறுமியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

மேலும் அனைத்து தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். ஏக காலத்தில் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் திருமுருகன் அதிகபட்ச தண்டனையான ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.


Next Story