கீரை அறுவடை பணிகள் தீவிரம்


கீரை அறுவடை பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 29 April 2023 6:45 PM GMT (Updated: 29 April 2023 6:46 PM GMT)

கடலூர் அருகே கீரை அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கீரைகள் அதிகளவு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

கடலூர்

கடலூர்

கீரை சாகுபடி

கடலூர் அருகே உள்ள தாழங்குடா பகுதி மக்களில் பெரும்பாலானோர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சிலர் விவசாயமும் செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த பகுதிகளில் நெல், பருத்தி, உளுந்து, நிலக்கடலை, எள், சோளம், கம்பு, மரவள்ளி கிழங்கு, சர்க்கரை வள்ளிகிழங்கு, புடலங்காய், பாகற்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், மிளகாய், கத்தரிக்காய், கீரை உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக தாழங்குடா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது கீரையை விவசாயிகள் அதிகளவு சாகுபடி செய்திருந்தனர். குறுகிய கால பயிரான அவற்றை விவசாயிகள் பராமரித்து வந்த நிலையில், தற்போது அவை அறுவடைக்கு தயாராகி உள்ளது. இதையடுத்து தொழிலாளர்கள் மூலம் கீரைகளை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

உழவர் சந்தையில் விற்பனை

பின்னர் அந்த கீரைகளை சிறு சிறு கட்டுகளாக கட்டி, கடலூர் உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் கடலூர் மஞ்சக்குப்பம், குண்டு உப்பலவாடி, புதுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக கொண்டு சென்றும் விற்பனை செய்கின்றனர். இதில் ஒரு கட்டு கீரை ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையாகிறது.இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இப்பகுதியில் நிலத்தடி நீர் மூலம் முளைக்கீரை, அரைக்கீரை உள்ளிட்ட கீரை வகைகளை சாகுபடி செய்து வருகிறோம். தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள கீரையை பறித்து மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்கிறோம். வெயில் காலத்தில் கீரையை உட்கொண்டால் உடல் உஷ்ணத்தை குறைக்கும்.மேலும், செரிமானத் தன்மையை கொடுக்கும். இதனால். பொதுமக்கள் தற்போது கீரையை விரும்பி வாங்கி செல்கின்றனர். இதனால் கீரை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளோம் என்றனர்.


Next Story