வக்கீல்கள் திடீர் சாலை மறியல்


வக்கீல்கள் திடீர் சாலை மறியல்
x

கொலை மிரட்டல் புகாரில் நடவடிக்கை கோரி புதுக்கோட்டையில் வக்கீல்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்படைந்தது.

புதுக்கோட்டை

கொலை மிரட்டல்

புதுக்கோட்டையை சேர்ந்தவர் வக்கீல் கலீல். இவர் தனது கட்சிக்காரரான பெண் ஒருவருக்கும், அவரது கணவருக்கும் இடையேயான குடும்ப தகராறு தொடர்பான வழக்கிற்காக புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்திற்கு வந்திருக்கிறார். அப்போது அந்த பெண்ணின் கணவரான சவேரியார்பட்டினத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ், வக்கீல் கலீலை தகாத வார்த்தையில் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் கலீல் புகார் அளித்தார். அதன்போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்யவில்லை என கூறியும், போலீசாரை கண்டித்தும் புதுக்கோட்டை கோர்ட்டு முன்பு வக்கீல்கள் இன்று காலை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வக்கீல் கலீல் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

வக்கீல்கள் திரண்டு சாலையில் அமர்ந்தும், வரிசையாக கைகளை கோர்த்தப்படியும் நின்றதால் கோர்ட்டு முன்பு பெரும் பரபரப்பானது. அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் சாலையில் நிறுத்தப்பட்டன. ஒரு சில வாகனங்கள் கோர்ட்டு உள் பகுதி வழியாக செல்ல முயன்றன. அந்த வாகனங்களை வக்கீல்கள் தடுத்து நிறுத்தினர். மேலும் போலீசாருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

போலீசார் பேச்சுவார்த்தை

வக்கீல்களின் இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராகவி, இன்ஸ்பெக்டர் மருது மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்கள் மற்றும் வக்கீல் சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வக்கீல் கலீலுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என கூறி மறியலில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

இந்நிலையில் போலீசார் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், நாளை காலைக்குள் (அதாவது இன்று) அவர் கைது செய்யப்படுவார் என உறுதியளித்தனர். அதன்பின் வக்கீல்கள் சமாதானமடைந்து போராட்டத்தை கைவிட்டனர். காலை 10.40 மணிக்கு தொடங்கிய மறியல் போராட்டம் மதியம் 1 மணிக்கு முடிவடைந்தது. இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்தது.

கோர்ட்டு புறக்கணிப்பு

இதேேபால் வக்கீல் கலீலை தகாத வார்த்தையால் திட்டியவரை கைது செய்யக்கோரி ஆலங்குடி வக்கீல் சங்க தலைவர் ராஜா தலைமையில், ஆலங்குடியில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.


Next Story