கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்தது ஏற்புடையதல்ல: அ.தி.மு.க. மாநாட்டுக்கு தடை கேட்ட மனு தள்ளுபடி- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்தது ஏற்புடையதல்ல: அ.தி.மு.க. மாநாட்டுக்கு தடை கேட்ட மனு தள்ளுபடி- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

விமான நிலையத்தில் அதிகாரியிடம் சான்று பெறவில்லை என்று அ.தி.மு.க. மாநாட்டிற்கு தடை கேட்டு கடைசி நேரத்தில் தாக்கல் செய்த மனு ஏற்புடையதல்ல. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


விமான நிலையத்தில் அதிகாரியிடம் சான்று பெறவில்லை என்று அ.தி.மு.க. மாநாட்டிற்கு தடை கேட்டு கடைசி நேரத்தில் தாக்கல் செய்த மனு ஏற்புடையதல்ல. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அ.தி.மு.க. மாநாடு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை பெருங்குடி கருப்பசாமி கோவில் எதிர்புறத்தில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) அ.தி.மு.க. மாநாடு நடக்கிறது. இந்த மாநாடு நடக்கும் பகுதியானது, மதுரை விமான நிலையத்தின் அருகில் அமைந்து உள்ளது. விமான நிலையத்தில் தரை இறங்கும் போது விமானங்கள் மிகவும் தாழ்வான பகுதியில்தான் பறக்கும். விமான நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். ஆனால் மாநாட்டில் பங்கேற்போர் வாண வேடிக்கை, பட்டாசு வெடிக்கும் போது அசம்பாவிதம் ஏற்பட்டால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதை கவனத்தில் கொள்ளாமல் மாநாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டுக்கு மதுரை விமான நிலைய அதிகாரியிடம் தடையில்லாச்சான்று பெறவில்லை. எனவே நாளை நடக்க உள்ள அ.தி.மு.க. மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

நிபந்தனை ஏற்பு

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன், வக்கீல்கள் சந்திரசேகர், தமிழ் செல்வம், பாரதி கண்ணன், மாரீஸ்குமார், தினேஷ் பாபு ஆகியோர் ஆஜராகி, அ.தி.மு.க. மாநாட்டுக்கு முறையான அனுமதி பெற்று உள்ளோம். மாநாட்டுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதில் 20-வது நிபந்தனையாக விமான நிலைய சுற்றுப்பகுதிகளில் பட்டாசு வெடிக்க அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிபந்தனையை நாங்கள் ஏற்கனவே ஏற்றுக் கொண்டு உள்ளோம். மாநாட்டுக்கான பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டன. மனுதாரர் விளம்பர நோக்கத்திற்காக இந்த வழக்கை தாக்கல் செய்து உள்ளார். இதை தள்ளுபடி செய்ய வேண்டும், என்று வாதாடினர்.

மனு தள்ளுபடி

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அ.தி.மு.க. மாநாடு 4 மாதங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டு விட்டது. பல்வேறு பணிகள் முடிவடைந்து, மாநாடு நடக்க உள்ளது. கடைசி நேரத்தில் விடுக்கப்பட்டுள்ள மனுதாரரின் கோரிக்கை ஏற்புடையதல்ல என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story