பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்


பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
x
தினத்தந்தி 9 Oct 2022 6:45 PM GMT (Updated: 9 Oct 2022 6:45 PM GMT)

திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி மட்டுமின்றி விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட மலை சுற்றும் பாதையில் கிரிவலம் செல்கின்றனர்.

இந்த மாதத்திற்கான பவுர்ணமி இன்று அதிகாலை 4.06 மணியளவில் தொடங்கியது. இதனால் அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர்.

தற்போது பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.

இதனால் திருவண்ணாமலை நகரில் காணும் இடமெங்கும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது. பகல் நேரத்தில் குறைந்த அளவிலான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

கூட்டம் அலைமோதியது

அதுமட்டுமின்றி கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்க கோவில்கள் மற்றும் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தாிசனம் செய்தனர். அருணாசலேஸ்வரர் கோவிலில் பொது தரிசனம் வழியில் பக்தர்கள் சாமி செய்ய சுமார் 4 மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து இரவு 7 மணிக்கு மேல் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவிலும் கிரிவலப்பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றதால் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

பவுர்ணமி கிரிவலத்தையொட்டி தற்காலிக பஸ் நிலையங்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டன. பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மற்றும் 16 கால் மண்டபத்தின் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

பவுர்ணமி நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 3.09 மணிக்கு நிறைவடைந்தது. இதனால் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர். மேலும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.


Next Story