மதுபோதை தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை


மதுபோதை தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை
x
தினத்தந்தி 23 Oct 2022 7:30 PM GMT (Updated: 23 Oct 2022 7:31 PM GMT)

எடப்பாடி அருகே மதுபோதை தகராறில் தொழிலாளியை அடித்துக்கொன்ற தந்தை, அவரது மகன்களை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

எடப்பாடி:-

எடப்பாடி அருகே மதுபோதை தகராறில் தொழிலாளியை அடித்துக்கொன்ற தந்தை, அவரது மகன்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தொழிலாளி

ேசலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கோரணம்பட்டி ஊராட்சி செந்தியாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 57). மரம் ஏறும் தொழிலாளி. இதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி என்பவரின் மனைவி கமலா.

இவர் லாரி டிரைவரான தனது மகன் கார்த்திக் (39), மருமகள் சுமதி மற்றும் பேரன்கள் ஜீவா என்கிற நித்தீஷ் (21), மவுனீஷ் (19) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் தனது கணவரை பிரிந்த கமலா, முருகனுடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். முருகன் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து கமலா மற்றும் அவரது மகன், மருமகள், பேரன்களுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

அடித்துக்கொலை

இதனிடையே நேற்று முன்தினம் முருகன், அளவுக்கு அதிகமாக மது அருந்திய நிலையில், கமலாவின் மருமகளான சுமதியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது பணி முடிந்து வீடு திரும்பிய சுமதியின் கணவர் கார்த்திக் தனது மனைவியிடம் தகராறு செய்த முருகனை தட்டி கேட்டு உள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திக், அருகில் கிடந்த கட்டை மற்றும் இரும்பு கம்பியால் முருகனை சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. இதில் முருகன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

இதைப்பார்த்த கார்த்திக் தனது மகன்களான ஜீவா என்கிற நித்தீஷ், மவுனிஷ் ஆகியோருடன் தப்பி ஓடிவிட்டார். இதனிடையே நேற்று காலை அந்த வழியாக வந்த முருகனின் உறவினர் ரத்தினம், வீட்டில் முருகன் ரத்த காயங்களுடன் மயங்கி கிடப்பதை கண்டு அவரை மீட்டு, எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

3 பேர் கைது

இது குறித்து தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகனை கொன்றதாக கார்த்திக் மற்றும் அவரது மகன்கள் ஜீவா என்கிற நித்தீஷ், மவுனிஷ் ஆகியோரை கைது செய்தனர்.

தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.


Next Story