12 ஆண்டுகளாக விடுப்பு எடுக்காத அரசு பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு


12 ஆண்டுகளாக விடுப்பு எடுக்காத அரசு பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு
x

காரைக்குறிச்சி அரசு பள்ளியில் 12 ஆண்டுகளாக விடுப்பு எடுக்காத ஆசிரியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ராஜேந்திரன். இவர் கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து காரைக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து வருகை புரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் அந்த பள்ளியின் மாணவ-மாணவிகள் அதிகளவு விடுமுறை இல்லாமல் பள்ளிக்கு வருவதை வழக்கமாகக் கொண்டனர்.

இந்தநிலையில் காரைக்குறிச்சி பள்ளியின் பட்டதாரி அறிவியல் ஆசிரியர் கலையரசன் தொடர்ந்து 12 ஆண்டுகளாக விடுப்பு எடுக்காமல் பணி செய்து வந்தார். இதனை பாராட்டும் விதமாக காரைக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பட்டதாரி ஆசிரியர் கலையரசனுக்கு கேடயம் வழங்கி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் பாராட்டினார். மேலும் இந்த பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளில் 60 பேர் இந்த ஆண்டு முழுவதும் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்துள்ளார்கள். அவர்களை பாராட்டும் விதமாக அவர்களுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டினார். அது மட்டும் இல்லாமல் தற்போது இந்த ஆண்டு குறைந்த பட்சம் அரை நாள் அல்லது ஒரு நாள் மட்டும் விடுப்பு எடுத்துள்ள 100 மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கும் பரிசுகள் வழங்க இருப்பதாக தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தெரிவித்தார்.


Next Story