கொடைக்கானல் கோடை விழா- மலர் கண்காட்சி நாளை தொடக்கம்...!


கொடைக்கானல் கோடை விழா மலர் கண்காட்சி நாளை தொடங்க உள்ள நிலையில் இன்றே சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

திண்டுக்கல்


மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

வருடம் முழுவதும் இதமான சீதோசனம் நிலவி வந்தாலும் கோடை சீசன் மற்றும் ஆப் சீசனில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

கோடை சீசனில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக விழா நடத்தப்படவில்லை. இந்த நிலையில் நாளை (24-ந்தேதி) கோடை விழா, மலர் கண்காட்சி தொடங்க உள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு மலர் கண்காட்சி கோடை விழா நடைபெறுகிறது.

இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் கொடைக்கானலுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

அதிக அளவு சுற்றுலா வாகனங்களால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொடைக்கானல் ஏரியை சுற்றி உள்ள பகுதிகளில் பேரிகார்டு வைத்து கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.

மோயர்பாய்ண்ட், பைன்பாரஸ்ட், குணாகுகை, தூண்பாறை, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. நீண்ட நேரம் காத்திருந்து நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

நாளை கோடை விழா மலர் கண்காட்சி தொடங்க உள்ள நிலையில் அதற்கான பணிகளில் வேளாண் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பிரையண்ட் பூங்காவில் டைனோசர் உருவம், திருவள்ளுவர் சிலை மற்றும் அறிவியல் படைப்புகள் மலர்களால் உருவாக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளை காலை 11 மணிக்கு திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமையில் விழா தொடங்க உள்ளது. விழாவை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைக்கிறார். இதில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஆர்.சக்கரபாணி, மதிவேந்தன், வேலுச்சாமி எம்.பி., செந்தில்குமார் எம்.எல்.ஏ. மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். நாளை தொடங்கும் கோடை விழா 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் 6 நாட்கள் தோட்டகலைத்துறை சார்பில் மலர் கண்காட்சியும், சுற்றுலாத்துறை சார்பில் கோடை விழாவும் நடைபெற உள்ளது.

இந்நிலையில், மலர் கண்காட்சியில் வைப்பதற்காக மலர்களால் ஆன மயில் உருவம், டைனோசர் உருவம் வெள்ளைப்பூண்டு உருவம் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. இதனை காண்பதற்காக இன்று மாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் மலர்க்கண்காட்சி நடைபெறும் பகுதிக்கு வருகை புரிந்தனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என கருத்தில் கொண்டு மாவட்ட காவல் துறையின் சார்பாக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் மலைப்பகுதியில் பழுதடையும் வாகனங்களை அகற்றுவதற்காக ரெக்கவரி வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பழுதாகும் வாகனங்களை சீர் அமைப்பதற்காக தனி குழுவினர் உருவாக்கப்பட்டுள்ளன. போலீசாருடன் இணைந்து பணிபுரிய தனியார் தொண்டு நிறுவன இளைஞர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 2 ஆண்டுகளுக்கு பின்னர் கோடைவிழா நடைபெறுவதால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.


Next Story