பொதுமக்களை தாக்கிய கேரள வாலிபர்
குற்றாலத்தில் பொதுமக்களை தாக்கிய கேரள வாலிபரை தீயணைப்பு படையினர் பிடித்தனர்.
தென்காசி:
குற்றாலம் மெயின் அருவி அருகே உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நேற்று முன்தினம் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. அதில் ஒரு டீக்கடையில் ஊழியர்கள் கடையை அடைத்து விட்டு அதில் ஒருவர் மட்டும் படுத்திருந்தார். அப்போது, அங்கு வந்த கேரளாவை சேர்ந்த ஒரு வாலிபர் அந்த கடைக்குள் புகுந்து அவரை சரமாரியாக தாக்கி கழுத்தை நெறித்தார்.
அந்த சமயத்தில் அங்கு வந்த ெபாதுமக்கள் சிலா் அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் அனைவரையும் தாக்கினார். சினிமாவில் வருவது போன்று அவரைப் பிடிக்க வருபவர்களை தூக்கி வீசினார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அவர்களும் அங்கு விரைந்தனர். இருந்தாலும் போலீசாருக்கும் அந்த வாலிபர் அஞ்சவில்லை. அவரை பிடிக்க முடியாததால் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் வந்து நீண்ட நேரம் போராடி கயிறு கட்டி அந்த வாலிபரை பிடித்து தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
விசாரணையில் அந்த வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.