கீழ்பவானி வாய்க்கால், விவசாயிகள் பிரச்சினை: பா.ஜ.க. சார்பில் உண்மை கண்டறியும் குழு


கீழ்பவானி வாய்க்கால், விவசாயிகள் பிரச்சினை: பா.ஜ.க. சார்பில் உண்மை கண்டறியும் குழு
x

கீழ்பவானி வாய்க்கால், விவசாயிகள் பிரச்சினை குறித்து பா.ஜ.க. சார்பில் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

2013-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கீழ்பவானி வாய்க்காலை தூர்வாரும் நோக்கத்தோடு கான்கிரீட் கரைகளை சீரமைக்கும் திட்டங்களை செயல்படுத்திய நேரத்தில் தி.மு.க. தடுத்து நிறுத்தியது.

பின்னர், அ.தி.மு.க. ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் நீர்மேலாண்மைத் திட்டங்களை கருத்தில்கொண்டு நபார்டு வங்கி மூலம் ரூ.940 கோடி செலவில் கீழ்பவானி அணை வாய்க்காலின் கரையை பலப்படுத்தும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. மீண்டும் அப்பணியை கடுமையாக எதிர்த்ததோடு, அரசியல் கட்சியினரையும், அப்பாவி விவசாயிகளையும் தூண்டிவிட்டு திட்டப்பணிகளைத் தடுத்து நிறுத்தியது.

தி.மு.க. தலைகீழ் நிலைப்பாடு

அந்தச் சமயத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும், இன்றைய முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், கீழ்பவானி வாய்க்காலைச் சீரமைக்கும் முன்பு குழு அமைத்து ஆய்வு செய்து, விவசாயிகளிடம் கருத்து கேட்டபின்னரே, அடுத்தகட்ட பணியை தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மேற்கொள்ளும் என வாக்குறுதி கொடுத்தார்.

அந்த தேர்தலில் இன்றைய அமைச்சர்கள் முத்துச்சாமி, சாமிநாதன் உள்ளிட்டோர் இதன் காரணமாக வெற்றியும் பெற்றார்கள். ஆனால் மீண்டும் ஆட்சிக்கு வந்த தி.மு.க., வாக்குறுதி கொடுத்தபடி ஆய்வுக்குழு அமைக்காமல் திட்டத்தைத் தொடங்க திடீர் முனைப்பு காட்டுகிறது.

இதனால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிடும் என்ற அச்சத்தோடு போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள். தி.மு.க.வின் இந்த திடீர் தலைகீழ் நிலைப்பாடு கவலையளிக்கிறது. நபார்டு வங்கியின் நிதி முறையாக பயன்படுத்தப்படுமா, அது விவசாயிகளுக்குப் பலன் தருமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உண்மை கண்டறியும் குழு

எனவே விவசாயிகள் தரப்பிலிருந்து கோரிக்கையை ஏற்று, கடைமடை முதல் முதல்மடை வரை நடைபயணம் மேற்கொண்டு, பாசன விவசாயிகளை சந்தித்து கால்வாயையும் ஆய்வுசெய்து, அறிக்கை சமர்ப்பிக்க பா.ஜ.க. சார்பில் விவசாய அணி மாநிலத் தலைவர் ஜி.கே.நாகராஜ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் வக்கீல் பழனிசாமி, சமூக ஆர்வலர் செல்வக்குமார் உள்ளிட்டவர்களும் இடம்பெறுவார்கள். இவர்கள் மற்றுமுள்ள சமூக ஆர்வலர்கள், நீராதார வல்லுனர்கள், முன்னாள் பொதுப்பணித்துறை நிர்வாகிகள் ஆகியவர்களோடு கலந்தாலோசித்து அவர்களையும் குழுவில் இணைத்து, கீழ்பவானி வாய்க்காலின் உண்மைநிலையை கண்டறிந்து பா.ஜ.க. தலைமைக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.

அடுத்தகட்டமாக பா.ஜ.க., விவசாயிகளின் நலன்காக்க தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story